துலாம் - தமிழ் மாத ஜோதிடம்


துலாம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 14 Jun 2022 12:51 PM GMT (Updated: 2022-06-14T18:23:17+05:30)

ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை


நினைத்ததை நினைத்தபடி செய்ய நினைக்கும் துலாம் ராசி நேயர்களே!

ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் வீற்றிருந்து சர்ப்ப தோஷத்தை உருவாக்குகிறார்கள். அர்த்தாஷ்டமச் சனி வக்ரம் பெற்று செவ்வாயைப் பார்க்கிறார். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

ரிஷப - சுக்ரன் சஞ்சாரம்

ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது, 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப நல்ல முன்னேற்றங்கள் வந்து சேரும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் உருவாகும்.

மிதுன - புதன் சஞ்சாரம்

ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பாக்கியாதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஒரு பொன்னான நேரமாகும். பூர்வீக சொத்துக்கள் அல்லது புதிய சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றங்கள் இனிமை தரும் விதத்தில் அமையும்.

மேஷ - செவ்வாய் சஞ்சாரம்

ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தனது சொந்த வீடான மேஷத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் சகோதர ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். இடம், பூமியால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபநிகழ்வுகள் ஒவ்வொன்றாக நடந்தேறும். பணியில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

கடக - புதன் சஞ்சாரம்

ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் தொழில் ஸ்தானம் எனப்படும் 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பணவரவு திருப்தியாக இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து, அதை முன்னிட்டும் இடமாற்றம் வரலாம். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுன - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்திற்கு ஆனி 29-ந் தேதி வருகிறார். இக்காலம் ஒரு இனிய காலமாகும். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அதிலும் புதன் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்த சலுகைகள் கிடைக்கும். தேங்கியிருக்கும் காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும்.

இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 17, 18, 19, 28, 29, ஜூலை: 3, 4, 5, 10, 11, 12, 15, 16 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளம்சிவப்பு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் அர்த்தாஷ்டமச் சனி வக்ரம் பெறுவதால் ஓரளவு நன்மை கிடைக்கும். இனிமை தரும் விதத்தில் இடமாற்றம் வந்து சேரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகள் வழியில் உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். மேஷ - செவ்வாயின் சஞ்சார காலத்தில், உங்கள் எண்ணங்கள் ஈடேறும். பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.


Next Story