மீனம்: புத்தாண்டு ராசிபலன் 2026: இதனையறிந்து செயல்பட்டால் எந்த துறையிலும் நீங்கள் தான் டாப்..!


மீனம்: புத்தாண்டு ராசிபலன் 2026: இதனையறிந்து செயல்பட்டால் எந்த துறையிலும் நீங்கள் தான் டாப்..!
x

இந்த ஆங்கில புத்தாண்டு அரசியல் துறையினருக்கு ஒரு விடிவெள்ளியாக அமையும்.

மீனம்


இறையருளால் நல்ல விஷயங்கள் நடக்கும்

மீனம் ராசியினருக்கு இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு நல்ல பலன் தரும் ஆண்டாக இந்த ஆங்கில புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் ராசி அதிபதி பஞ்சம ஸ்தானத்தில் உச்சகதியில் அமர்வது, ராசியை பார்வை செய்வது ஆகியவை யோகமான அமைப்பு ஆகும். ஜென்ம சனிக்கு ராசி அதிபதி குருவின் பார்வை கிடைப்பதால் பொறுமைக்கு ஏற்ற நல்ல பலன்கள் வீடு வந்து சேரும். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் ஏற்படும். ஜூன் மாதம் வரை சில சங்கடங்கள் இருந்தாலும் அவற்றை சமாளித்துக் கொள்வீர்கள்.

அரசியல் மற்றும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடந்த காலங்கள் சோதனையாக அமைந்திருக்கும். இந்த ஆங்கில புத்தாண்டு அரசியல் துறையினருக்கு ஒரு விடிவெள்ளியாக அமையும். உங்கள் அறிவுரைகள் பலரது நல்வாழ்க்கைக்கு அடிப்படையாக அமையும். துன்பங்களையே சந்தித்து வந்த உங்களுக்கு இறையருளால் நல்ல விஷயங்களும் நடக்கும் என்று இந்த புத்தாண்டு உறுதியளிக்கிறது. புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.

குடும்பம், நிதிநிலை

இல்ல துணையோடு இதுவரை இருந்த சண்டை சச்சரவுகள் படிப்படியாக விலகும். வீடு அல்லது நிலம் வாங்குவதில் இருந்த தடை தாமதங்கள் விலகும். கண்ணீர் விட்டு அழுத இரவுகள் இனிமேல் இல்லை. குடும்ப அங்கத்தினர் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்கள் மீது உண்மையாக பாசம் காட்டும் உறவுகள் தேடி வருவார்கள். உண்மையான நண்பர்களை கடந்த காலங்களில் தெரிந்து கொண்ட நீங்கள் அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டிய காலகட்டம் இது.

செலவுகள் அதிகமாக ஆனாலும் அதற்கேற்ற வரவுகள் படிப்படியாக அதிகரிக்கும். உங்களுடைய முதலீடுகள் சிறிதாக இருந்தாலும் அதற்கேற்ற லாபம் வந்து சேரும். செலவு விஷயங்களில் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும். பணவரவு ஏற்பட்டால் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும்.

தொழில், உத்தியோகம்

தொழில் துறையை பொறுத்தவரை கடந்த கால சிரமங்களுக்கு ஏற்ற பலன்கள் இந்த ஆண்டு கைவந்து சேரும். கல்வி, ஆலோசனை, நீதித்துறை, மருத்துவம், ஆன்மீகம் ஆகிய துறையில் உள்ளவர்களுக்கு சமூக மதிப்பு அதிகரிக்கும். பலர் சுயதொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்துவார்கள். நிலுவையில் இருந்த கட்டுமான பணிகள் நல்லவிதமாக நிறைவேறும். தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் கையில் கிடைக்கும்.

அரசு பணி, ஆசிரியர்கள், வங்கிப் பணி, நிதி நிறுவனம், வெளிநாட்டு நிறுவனம் ஆகிய துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு இது முன்னேற்றமான ஆண்டு. பதவி உயர்வுகள் உங்களைத் தேடி வரும். அத்துடன் பல சிக்கல்களும் உடன் வரும் என்பது உங்களுக்கே தெரியும். அதனால் எந்த விஷயத்தையும் தள்ளிப்போடாமல் உடனடியாக தீர்மானமான முடிவெடுக்க வேண்டும். அமைதியாகவும், நிதானமாகவும் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்.

கலை, கல்வி

கலைத்துறையினர், இசைத் துறையினர், சினிமா, தொலைக்காட்சி, ஊடகம் ஆகிய துறைகளில் நம்பிக்கை இல்லாமல் இருந்த மீனம் ராசியினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் இப்போது விலகி விடுவார்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட்டால் எந்த துறையிலும் நீங்கள் இந்த ஆண்டு நீங்கள் உச்சம் தொட முடியும்.

மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களிடம் ஆலோசனை மற்றும் ஆசி பெற்றால் தேர்வுகளில் நிச்சயம் நல்ல வெற்றி பெற முடியும். உங்களுடைய கல்வித் தொகையை உடன் பிறந்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தந்து உதவி செய்வார்கள். சட்டம் மற்றும் அறிவியல் துறையில் மாணவ மாணவியர்கள் இந்த ஆண்டு சாதனை புரிவார்கள். மாணவர்களுக்கு இது தனி திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் ஆண்டாக மலர்கிறது.

நன்மைகள் நாடி வர..

உடல் நிலையை பொறுத்தவரை எலும்பு சம்பந்தமான சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். ஏற்கனவே மூட்டு வலி, கை கால் வலி உள்ளவர்கள் தொடர்ந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மெதுவாகவே பயணியுங்கள். தலை சுற்றல், வாந்தி, கை கால்களில் வீக்கம், அடி வயிற்றில் வலி ஆகிய பிரச்சினைகள் இருந்தால் கண்டிப்பாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

அனாதை ஆசிரமங்களுக்கு இரும்பு பாத்திரங்களை முடிந்த வரை தானமாக வழங்கலாம். அதன் மூலம் சனியின் பாதிப்புகள் விலகும். ராசி அதிபதி குருவின் பலத்தை முழுமையாக பெறுவதற்காக வியாழக்கிழமைகளில் பொன்னிற ஜாங்கிரி இனிப்பை கோவிலுக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிரசாதமாக வழங்கலாம். பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு நீங்கள் செய்யும் சிறிய அளவு திருப்பணியும் உங்கள் நல்வாழ்க்கைக்கு உதவியாக அமையும்.

கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்

1 More update

Next Story