5 நாட்களில் ரூ. 226 கோடி வசூலித்த சிரஞ்சீவி படம்

அனில் ரவிபுடி இயக்கிய ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படம் கடந்த 12ம் தேதி வெளியானது.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாகி வெற்றிபெற்ற தெலுங்கு திரைப்படம், ‘சங்கராந்திக்கு வஸ்துன்னாம்’. வெங்கடேஷ் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நாயகியாகவும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். ரூ.50 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரூ.300 கோடியை வசூலித்தது.
இந்தப் பெரும் வெற்றியைத் தொடர்ந்து அனில் ரவிபுடி இயக்கியிருக்கும் திரைப்படம், ‘மன சங்கர வர பிரசாந்த் காரு’. இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நயன்தாராவும், இரண்டாவது நாயகியாக கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர்.
2015-ம் ஆண்டு ‘பட்டாஸ்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், அனில் ரவிபுடி. இவர் தொடர்ச்சியாக ‘சுப்ரீம்’, ‘ராஜா தி கிரேட்’, ‘பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன் 2’, ‘சரிலேரு நீக்கெவரு’, ‘பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன் 3’, ‘பகவந்த் கேசரி’, ‘சங்கராந்திக்கு வஸ்துன்னாம்’ என்று 8 படங்களை இயக்கியிருக்கிறார்.
9வது படமாக ‘மன சங்கர வர பிரசாந்த் காரு’ கடந்த 12ஆம் தேதி வெளியானது. அனில் ரவிபுடி இயக்கத்தில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் இது.
இந்த நிலையில், ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படம் உலகளவில் 5 நாட்களில் ரூ.226 கோடி வசூல் செய்துள்ளது. தெலுங்கு மாநிலங்களில் 5வது நாளில் அதிகமாக வசூலித்த முதல் திரைப்படமாக இந்தப் படம் புதிய சாதனை நிகழ்ந்துள்ளது.






