திரையரங்க ஆபரேட்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஜேம்ஸ் கேமரூன்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாரானது. இந்தப்படம் ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியானது. 'அவதார்: தி வே ஆப் வாட்டர்', சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் இது ஒன்றாகும்.
அவதார் படத்தின் மூன்றாம் பாகத்திற்கு ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஜேம்ஸ் கேமரூன் மூன்றாம் பாகத்தில் பண்டோரா உலகில் இரண்டு புதிய கலாச்சாரங்களை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்திருந்தார். அவதார் 3ல் நெருப்பு ஒரு குறியீட்டு நோக்கத்தைக் கொண்டுள்ளது என்றும், அந்தக் கருத்தைச் சுற்றி குறிப்பாக ஒரு கலாச்சாரம் பின்னப்பட்டிருப்பதாகவும் கூறினார். ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் திரையரங்க புரஜெக்டர் ஆபரேட்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ புரொஜெக்ஷன் ஸ்பெசிபிகேஷன் கோப்பு மற்றும் பிரேமிங் விளக்கப்படம் சேர்க்கப்பட்டுள்ளது, இதில் ஒளி அளவுகள், ஆடியோ உள்ளமைவு, சரியான பிரேமிங் போன்றவை பற்றிய முக்கியமான தகவல்கள் உள்ளன. தயவுசெய்து அதைப் படித்து, உங்கள் ஒளி மற்றும் ஒலி அமைப்புகள் அளவீடு செய்யப்பட்டு பயன்படுத்தத் தயாராக உள்ளன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளில் ஒலியின் தரத்தை 7.0 ஆக வைக்க வேண்டும். அப்போதுதான் இப்படத்தின் முழுமையான ஒலி அனுபவம் கிடைக்கும். தனிப்பட்ட முறையிலேயே நான் மிக்ஸிங் பணியில் இருப்பதால் அதற்கு குறைவாக வைக்க வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.
அவதாரின் நான்காவது பாகம் 2029 டிசம்பரிலும், ஐந்தாவது பாகம் 2031 டிசம்பரிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






