கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு; நீதி கேட்டு குரல் எழுப்பிய பாலிவுட் பிரபலங்கள்
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கில் நீதி கேட்டு பல்வேறு பாலிவுட் நடிகர், நடிகைகள் குரல் எழுப்பி வருகின்றனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 9-ந்தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு விரைவில் நீதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த வகையில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவரும் சமமாகவும், பாதுகாப்பாகவும் உணரும் சமூகமாக நாம் பரிணமிக்க வேண்டும். ஆனால் அதற்கு பல தசாப்தங்கள் ஆகும். அடுத்த தலைமுறையை சிறப்பானதாக நாம் உருவாக்க வேண்டும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் என்ன நடக்கும்?
இப்போது நீதி என்பது இத்தகைய அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான். அதற்கான ஒரே வழி மிகவும் கடுமையான தண்டனை மட்டுமே. அந்த தண்டனை இதுபோன்ற குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை ஆலியா பட் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்னொரு கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம். பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை என்பதை மீண்டும் உணர்ந்திருக்கிறோம். 'நிர்பயா' துயர சம்பவம் நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் பெரிதாக எதுவும் மாறவில்லை என்பதை நினைவூட்டும் வகையில் மற்றொரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை கரினா கபூர் வெளியிடுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே நிகழ்வு, அதே போராட்டம். ஆனால், இன்றுவரை நாம் மாற்றத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதள பக்கத்தில், இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், "அந்த பெண்ணுக்காக நீங்கள் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்?" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
அதே போல், நடிகை ட்விங்கிள் கன்னா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த பூமிக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் குழந்தையாக இருந்தபோது, 'தனியாக பூங்காவிற்கு, பள்ளிக்கூடத்திற்கு, கடற்கரைக்கு செல்லாதே' என்று என்னிடம் சொல்லப்பட்டது. இன்று அதையே எனது குழந்தைக்கும் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் வெளியிட்டுள்ள பதிவில், "நமது 78-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், உலக அளவில் ஒரு நாடாக நாம் எவ்வளவு தூரம் வந்துவிட்டோம் என்பதில் பெருமை கொள்கிறோம். ஆனால் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்களை செய்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை. இன்றும் கூட, பாதிக்கப்பட்ட பெண் மீது குற்றம் சாட்டப்படுகிறது!
விரைவான நீதி, கடுமையான தண்டனைகள் மற்றும் அதைவிட முக்கியமாக சிறந்த வளர்ப்பு எதுவும் இல்லாவிட்டால், எதுவும் மாறப்போவதில்லை. நமது அடிப்படை பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும்போது நாம் உண்மையில் சுதந்திரமாக இருக்கிறோமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.