சிறுவயதிலேயே கமல்ஹாசனால் ஈர்க்கப்பட்டேன்- பிரபாஸ்
கமல்ஹாசனின் படைப்புகளால் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டேன். அவை என்னை மிகவும் பாதித்தது. எனது சினிமா ஆசையை மேலும் தூண்டியது என்று நடிகர் பிரபாஸ் 'கல்கி 2898 ஏ.டி' பட விழாவில் கூறினார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கல்கி 2898 ஏடி. பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ரூ.600 கோடி பட்ஜெட்டில் புராண காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து அறிவியல் கலந்து இந்த படம் உருவாகி வருகிறது. வைஜெயந்தி மூவீஸ் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூன் 27-ந்தேதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
படத்தில் பைரவா கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். அஸ்வத்தாமாவாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
படத்தில் புஜ்ஜி ரோபோ என்னும் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோவுக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார். மேலும் படத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புஜ்ஜி கார் அறிமுக விழா ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நேற்று மாலை நடந்தது. பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் பிரபாஸ் அந்த காரை விழா மைதானத்தில் ஓட்டி வந்து அறிமுகப்படுத்தினார். இதைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
விழாவில் பிரபாஸ் பேசியதாவது:- படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. அமிதாப்பச்சன் மற்றும் கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களுடன் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் உத்வேகம் ஊக்கம் அளிக்கிறது. அமிதாப்பச்சனின் பாரம்பரியம் மற்றும் கமல்ஹாசனின் சிறந்த நடிப்பு திறமை ஆகியவை சினிமாவில் எனது சினிமா கனவை வடிவமைத்தன. தீபிகா படுகோனே சர்வதேச அளவில் சிறந்த நடிகையாக உள்ளார்.
திஷா பதானி இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறார். திரைப்படத் தயாரிப்பாளர்களின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது. கமல்ஹாசனின் படைப்புகளால் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டேன். அவை என்னை மிகவும் பாதித்தது. எனது சினிமா ஆசையை மேலும் தூண்டியது.
இவ்வாறு அவர் பேசினார்.