“மாண்புமிகு பறை” - சினிமா விமர்சனம்


“மாண்புமிகு பறை” - சினிமா விமர்சனம்
x

எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார் நடிப்பில் வெளியான ‘மாண்புமிகு பறை’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

பறை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமார் தனது நண்பர்களுடன் ஒரு குழுவை நடத்தி, அழிந்து வரும் பறையிசையை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்து உயிர்ப்பிக்க நினைக்கிறார். அதேவேளை காதலி காயத்ரி ரெமாவை கரம்பிடிக்கிறார். ஆனால் கச்சேரிக்கு செல்லும் இடங்களில் எல்லாம் அவமானங்களையும், அவதூறுகளையும், ஏச்சு-பேச்சுகளையும் எதிர்கொள்கிறார். பறையிசையை கேவலமாக நினைக்கும் சிலர், லியோ சிவகுமார் குழுவினரை ஒழித்துக் கட்ட பார்க்கிறார்கள். அப்படி ஒரு மோதலில் லியோ சிவகுமார் தனது நண்பரை பறிகொடுக்கிறார். அவரையும் கொலை செய்ய சதி நடக்கிறது. இக்கட்டான சூழலில் தனது காதல் மனைவியுடன் லியோ சிவகுமார் தப்பினாரா? பறையிசையை மீட்டெடுத்தாரா? என்பதே மீதி கதை.

லியோ சிவகுமார் நடிப்பில் மெருகு ஏறியுள்ளார். அவரது நடிப்பு படத்துக்கு பலமாக இருக்கிறது. எமோஷனல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் இன்னும் ஜொலிப்பார். காயத்ரி ரெமாவின் உணர்வுபூர்வமான நடிப்பு பலம் சேர்க்கிறது. சில காட்சிகளில் முக பாவணைகளே வசனங்களை சொல்லிவிடுகிறது.

லியோ சிவகுமாரின் நண்பராக நடித்திருக்கும் ஆரியன், கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் என அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்துக்கு குறைவில்லாமல் நடித்துக் கொடுத்துள்ளார்கள்.

தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. கிராமத்து அழகை கொளஞ்சிகுமாரின் கேமரா அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது.

எதார்த்தமான காட்சிகள் பலம். பெரும்பாலான காட்சிகளில் சாதி பிரச்சினையையும், ஆணவ கொலைகளையும் அடிக்கடி காட்டுவது சலிப்பை உண்டாக்குகிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

பறையிசையை படமாக மட்டுமன்றி, அதன் சிறப்பை பாடமாகவும் எடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.விஜய் சுகுமார்.

மாண்புமிகு பறை - கவனிக்க வைக்கும் ஒலி

1 More update

Next Story