இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்

திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் வார இறுதி நாட்களில் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் வார இறுதி நாட்களில் ஏராளமான படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
'விடாமுயற்சி'
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் 'விடாமுயற்சி'. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் அஜித். இந்த நிலையில் இப்படம் கடந்த 3-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஒ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'டேர்டெவில்: பார்ன் அகெய்ன்'
மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் உருவாகும் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் மார்வெல் நிறுவனத்தின் கீழ் அடுத்ததாக உருவாகி வரும் படம் 'டேர்டெவில்: பார்ன் அகெய்ன்'. இதில், முன்பு வெளியான டேர்டெவில் தொடரில் நடித்திருந்த சார்லி காக்ஸ், வின்சென்ட் டி ஓனோப்ரியோர் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன், மார்கரிட்டா லெவிவா, டெபோரா ஆன் வோல், எல்டன் ஹென்சன், நிக்கி எம் ஜேம்ஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் 'டேர்டெவில்: பார்ன் அகெய்ன்' தொடர் நேற்று (5-ந் தேதி) ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'தூம் தாம்'
ரிஷப் சேத் இயக்கத்தில் பாலிவுட் முன்னணி நடிகை யாமி கவுதம் நடித்துள்ள படம் 'தூம் தாம்'. தேஷ்பாண்டே, ஆதித்யா தார், லோகேஷ் தார், புனித் வாடன் மற்றும் பலர் தயாரித்துள்ள இப்படத்திற்கு கேசவ் தார் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று ஈடிவி வின் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'தண்டேல்'
நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டேல்'. 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் நாளை (7-ந் தேதி) நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'ரேகா சித்திரம்'
ஆசிப் அலி மற்றும் அனஸ்வரா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'ரேகா சித்திரம்'. 'தி ப்ரீஸ்ட்' படத்தின் மூலம் பிரபலமான ஜோபின் டி சாக்கோ இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்தப் படத்தில் இந்திரன்ஸ், நிஷாந்த் சாகர், ஜரின் ஷிஹாப், சித்திக் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் நாளை சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'குடும்பஸ்தன்'
சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ள படம் 'குடும்பஸ்தன்'. இதில் மணிகண்டன் மற்றும் சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியுங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'
'சகுனி' பட இயக்குனர் ஷங்கர் தயாள் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான படம் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'. இந்த படத்தில் யோகி பாபுவுடன் செந்தில், சுப்பு பஞ்சு, லிஸி ஆண்டனி, கோவிந்த மூர்த்தி, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, அரசியல் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'பைண்டர்'
இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி நடிப்பில் வெளியான திரைப்படம் 'பைண்டர்'. இந்த படத்தில் நிழல்கள் ரவி, செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி மற்றும் பிரானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரபி புரொடக்சன் மற்றும் வியான் வென்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சூர்ய பிரசாத் இசையமைத்துள்ளார். உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.