நுகர்வோர் கோர்ட்டில் சிறப்பு சமரச முகாம்


நுகர்வோர் கோர்ட்டில் சிறப்பு சமரச முகாம்
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 1:20 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நேற்று நடந்த சிறப்பு சமரச முகாமில் 7 வழக்குகளுக்கான தீர்ப்புத்தொகை வழங்கப்பட்டது.

நாமக்கல்

சிறப்பு சமரச முகாம்

நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்படாமல் இருந்த 71 வழக்குகளுக்கான சிறப்பு சமரச முகாம் நேற்று நடந்தது. நீதிபதி டாக்டர் ராமராஜ் தலைமை தாங்கினார். இதில் 15 ஆண்டுகள் நிலுவையில் இருந்த வழக்கு உள்பட 7 வழக்குகளுக்கு தீர்ப்புத்தொகை வழங்கப்பட்டது.

அதன்படி கடந்த 2008-ம் ஆண்டில் வங்கி ஒன்று நாமக்கல்லில், கணேசபுரம் புதிய திருவை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு வாகன டிரைவர் பத்மநாபனுக்கு அனுப்பிய ஏ.டி.எம். அட்டை மற்றும் அதன் ரகசிய குறியீடு அடங்கிய கவரை தனியார் கொரியர் நிறுவனத்தினர் தவறான நபரிடம் வழங்கினர். அதற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்புத்தொகை மற்றும் அதற்கான வட்டி ரூ.40 ஆயிரத்தை நுகர்வோர் சமரச பேச்சுவார்த்தையில் கொரியர் நிறுவனம் நேற்று வழங்கியது.

ரூ.20 ஆயிரம்

அதேபோல் 2 சக்கர வாகனத்தை சரிவர பழுது பார்க்காமல் பணத்தை நாமக்கல்லில் உள்ள தனியார் 2 சக்கர வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனம் (தி நோபல் மோட்டார்ஸ் நிறுவனம்) வசூல் செய்ததாக கால்நடை துறையின் ஓய்வு பெற்ற துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கில் ரூ.20 ஆயிரம் இழப்பீடாக சமரச பேச்சு வார்த்தையின் போது பெற்றுத் தரப்பட்டது.

மேலும் சமையல் கியாஸ் சிலிண்டரை காலதாமதமாக கொடுத்ததோடு, அதிக விலை கேட்டதாக கடந்த 2019-ம் ஆண்டு எருமப்பட்டியை சேர்ந்த சசிகலா தொடர்ந்த வழக்கில் சமரசத் தீர்வு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஏஜென்சி உரிமையாளர் சார்பில் ரூ.17 ஆயிரம் முகாமில் செலுத்தப்பட்டது. மொத்தம் 7 வழக்குகளுக்கு நேற்று நடந்த முகாமில் தீர்ப்புத்தொகை வழங்கப்பட்டது. மேலும் 20 வழக்குகளில் சமரச தீர்வு காண சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிற 28-ந் தேதி மீண்டும் பேச்சு வார்த்தைக்காக வாய்தா போடப்பட்டுள்ளது.

இதில் வக்கீல்கள் ராமலிங்கம், பாலசுப்பிரமணியம், அய்யாவு, குமரேசன், சதீஷ்குமார், முரளிகுமார், அந்தோணி புஷ்பதாஸ், சந்திரசேகர் ஆகியோர் மத்தியஸ்தர்களாக செயல்பட்டனர்.


Next Story