முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 12,682 பேருக்கு சிகிச்சை
நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 2 ஆண்டுகளில் 12,682 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ காப்பீட்டு திட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமானது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 8 அரசு மருத்துவமனைகளிலும், 26 தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் நோயாளிகளுக்கான உரிய சிகிச்சைகள், பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை, புற்றுநோய் சம்பந்தப்பட்ட சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சைகள் உள்ளிட்ட சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
12,682 பேருக்கு சிகிச்சை
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 7.5.2021 முதல் தற்போது வரை முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இருதய நோய் அறுவை சிகிச்சை 1,268 பேருக்கும், சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிசிஸ்) 3,893 பேருக்கும், கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை 1,633 பேருக்கும், புற்றுநோய் சிகிச்சை 381 பேருக்கும், கல்லீரல் நோய் சிகிச்சை 82 பேருக்கும், மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை 2,894 பேருக்கும், தண்டுவடம் சிகிச்சை 106 பேருக்கும், காது மூக்கு தொண்டை சிகிச்சை 479 பேருக்கும், கண்நோய் அறுவை சிகிச்சை 1,946 பேருக்கு என நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த 12,682 நபர்களுக்கு ரூ.17 கோடியே 21 லட்சத்து 51 ஆயிரத்து 314 மதிப்பீட்டில் மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.