மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் போராட்டம் - மருத்துவ சேவைகள் பாதிப்பு


மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் போராட்டம் - மருத்துவ சேவைகள் பாதிப்பு
x
தினத்தந்தி 17 Aug 2024 2:48 PM IST (Updated: 17 Aug 2024 4:25 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் போராட்டத்தால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 9-ந்தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கின் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்தில் தற்போது மூத்த டாக்டர்களும் இணைந்துள்ளனர்.

இதனால் மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர் ஒருவர் கூறுகையில், "எங்கள் போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரே வழி இதுதான்" என்று கூறினார்.

டாக்டர்களின் போராட்டம் காரணமாக மேற்கு வங்காளத்தில் உள்ள அரசு எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனை, சம்புநாத் பண்டிட் மருத்துவமனை, கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story