அரியானா: தேர்தல் தேதி அறிவிப்புக்கு சற்று முன்னதாக முதல்-மந்திரியின் முக்கிய நடவடிக்கை


அரியானா முதல்-மந்திரி  நயாப் சிங் சைனி
x
தினத்தந்தி 16 Aug 2024 5:52 PM IST (Updated: 16 Aug 2024 5:57 PM IST)
t-max-icont-min-icon

அரியானாவில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.

சண்டிகர்:

பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் அரியானாவில் வரும் அக்டோபர் 1-ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. எனவே, அரசாங்கம் முக்கிய கொள்கைகளையோ, புதிய திட்டங்களையோ அறிவித்து நடைமுறைப்படுத்த முடியாது, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் புதிதாக பணி நியமனம் எதுவும் செய்ய முடியாது. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, மாநிலத்தில் உள்ள 5.20 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் போனஸ் தொகையின் முதல் தவணையை முதல்-மந்திரி நயாப் சிங் சைனி விடுவித்தார். இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் காரிப் பயிர்களுக்கு ஏக்கருக்கு 2,000 ரூபாய் போனஸ் வழங்கப்பட்டது. 8 மாவட்டங்களில் கால்நடை மருத்துவ மனைகள் மற்றும் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்கும் குறைவான வருமானம் பெறும் பண்ணை விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்த தேர்தலில் முக்கிய கட்சிகள் தனித்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி எதுவும் இதுவரை அமையவில்லை. பா.ஜ.க. அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் என உள்துறை மந்திரி அமித் ஷா, ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.

காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி இல்லை என்று அரியானா காங்கிரசின் முக்கிய தலைவரான பூபிந்தர் ஹூடா கூறியிருந்தார். இந்த கட்சிகள் மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட்டன.


Next Story