தாய் மீது திடீரென பாய்ந்த சிறுத்தைப்புலி; வெறும் கைகளாலேயே அடித்து கொன்ற இளைஞர்

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், வன விலங்குகளுடன் நேரடியாக மோத வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
கட்டாக்,
ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் மொரதா பகுதியில், சத்யபிரதா பூர்த்தி (வயது 24) என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவர் பண்ணை வீட்டில் இருந்தபோது, சிறுத்தைப்புலி ஒன்று திடீரென வேலியை கடந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
அது, பண்ணை வீட்டில் காவலுக்கு இருந்த பூர்த்தியின் வளர்ப்பு நாய் மீது பாய்ந்துள்ளது. அதன் குரைக்கும் சத்தம் கேட்டு, பூர்த்தியின் தாய் ஓடி சென்று பார்த்துள்ளார். பின்னாலேயே பூர்த்தியும் சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுத்தைப்புலி அவர்களை நோக்கி பாய்ந்தது.
இதனால், தன்னுடைய குடும்பத்தினரை பாதுகாப்பதற்காக, நேரடியாக களத்தில் இறங்கினார் பூர்த்தி . சிறுத்தைப்புலிக்கும், பூர்த்திக்கும் இடையே கடுமையான மோதல் நடந்தது. இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தடி, கம்புகளை எடுத்து கொண்டு ஓடி வந்தனர்.
ஆனால், அதற்கு தேவையின்றி போய் விட்டது. பூர்த்தி கைகளால் தாக்கியதில் காயமடைந்த சிறுத்தைப்புலி உயிரிழந்து விட்டது. இந்த தகவல் அறிந்து வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்கள் சிறுத்தைப்புலியின் இறந்த உடலை கைப்பற்றினர். சிறுத்தைப்புலி இறந்ததற்கான காரணம் என்னவென்று முதல்கட்ட விசாரணை நடந்து வருகிறது.
இதில், பூர்த்தியின் மார்பிலும், கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் பரிபாதாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கும் என கூறப்படுகிறது.
சிறுத்தைப்புலிக்கு நோய் பாதிப்பு அல்லது காயம் ஏற்பட்டு அதனால், மனிதர்கள் வசிக்க கூடிய பகுதிக்கு சென்றதா? என ஆய்வு செய்ய சிறுத்தைப்புலிக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், வன விலங்குகளுடன் நேரடியாக மோத வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.






