கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் பணியிடை நீக்கம்
சண்டிகார் விமான நிலையத்தில் பெண் காவலர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக கங்கனா ரனாவத் புகார் அளித்தார்.
சண்டிகார்,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார். இந்த நிலையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்வதற்காக கங்கனா ரனாவத் இன்று பிற்பகலில் சண்டிகார் விமான நிலையம் வந்தார்.
அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக கங்கனா ரனாவத் புகார் அளித்தார். டெல்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா காலிஸ்தான் ஆதரவாளர்கள் என விமர்சித்திருந்தார். அதற்காக குல்விந்தர் கவுர், கங்கனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து டெல்லி சென்ற கங்கனா ரனாவத் இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், சண்டிகார் விமான நிலையத்தில் பா.ஜ.க. எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குல்விந்தர் கவுர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.