இது மக்களுக்கான பட்ஜெட் - பிரதமர் மோடி மகிழ்ச்சி


இது மக்களுக்கான பட்ஜெட் - பிரதமர் மோடி மகிழ்ச்சி
x
தினத்தந்தி 23 July 2024 2:43 PM IST (Updated: 23 July 2024 5:20 PM IST)
t-max-icont-min-icon

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பது மக்களுக்கான பட்ஜெட் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை, செல்போன், தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, 80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்தநிலையில், 2024-25-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

சாமானிய மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி தரும் பட்ஜெட். சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய அனைவருக்கும் சக்தியாக அமைந்துள்ள பட்ஜெட். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட்டாக உள்ளது.

கல்வியையும் திறமையையும் ஊக்குவிக்கும் பட்ஜெட். சிறு குறு வியாபாரிகள், நடுத்தர வர்க்க வியாபாரிகள் அனைவரும் பட்ஜெட்டால் பலனடைவார்கள். நிரந்தர மற்றும் நிலையான வளர்ச்சிக்கு மத்திய பட்ஜெட் உதவும். ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பலத்தை பட்ஜெட் அளிக்கும்.

நாட்டில் புதிய நடுத்தர வர்க்க மக்களை முன்னுக்கு கொண்டுவரும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பும் ஒவ்வொரு நபர், ஒவ்வொரு வீடும் வளர்ச்சி பெற வேண்டும் என பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தும் வகையில் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story