பிரதமர் மோடி-அபுதாபி பட்டத்து இளவரசர் சந்திப்பு: இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை
ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் அபுதாபி பட்டத்து இளவரசர் சந்தித்து பேச உள்ளார்.
புதுடெல்லி:
அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவருடன் அமீரகத்தின் பல்வேறு துறை மந்திரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் இந்தியா வந்துள்ளது.
பட்டத்து இளவரசராக முதல் முறையாக இந்தியா வந்த அவருக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவரை மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் வரவேற்றார். பின்னர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அபுதாபி பட்டத்து இளவரசர் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் அபுதாபி பட்டத்து இளவரசர் சந்தித்து பேச உள்ளார். டெல்லியில் இன்றைய நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை மும்பை செல்லும் பட்டத்து இளவரசர், அங்கு இரு நாடுகளின் வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வில் கலந்துகொள்கிறார்.