பியூஷ் கோயலுடன் ஓ.பன்னீர்செல்வம் மகன் திடீர் சந்திப்பு - அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு

தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் நேற்று சென்னை வந்தார்.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடன் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. மேலும், இந்தக் கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி அணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தற்போது, டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வும் கூட்டணியில் இணைந்திருக்கிறது.
இந்த நிலையில், சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க இருக்கிறார். அதற்கு முன்னதாக, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை இறுதி செய்வதற்காக மத்திய மந்திரியும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நேற்றே சென்னை வந்துவிட்டார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அவரை இன்று டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணைந்தார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி முன்னாள் எம்.பி.யுமான பி.ரவீந்திரநாத்தும் பியூஸ் கோயலை திடீரென சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.விடம் இருந்து கூட்டணி அழைப்பு வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வரும் நிலையில் இன்னும் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கமும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்துவிட்டார். ஏற்கனவே, கூட்டணி குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது எல்லாம், தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லி வந்தார். இன்று, சென்னை விமான நிலையம் வந்த அவரிடம் அதே கேள்வி மீண்டும் எழுப்பப்பட்டதற்கு, “தை மாதத்தில் இன்னும் 25 நாட்கள் உள்ளன” என பதில் அளித்துவிட்டு நிற்காமல் சென்றார்.
ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில்தான் அவருடைய மகன் ரவீந்திரநாத் மத்திய மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து பேசியிருக்கிறார். கூட்டணிக்கு பா.ஜ.க. அழைக்காத நிலையில் மாற்று முடிவை எடுக்கவும் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.






