தாமிரபரணி பாசன பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி - 23-ந்தேதி தொடக்கம்


தாமிரபரணி பாசன பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி - 23-ந்தேதி தொடக்கம்
x

16-வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது.

நெல்லை,

தென்காசி மாவட்டம் வாகைக்குளத்திலும், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் குளத்திலும் கருந்தலை அன்றில், நத்தைக்குத்தி நாரை, நீர்க்காகம், சாம்பல் நாரை, வக்கா உள்ளிட்ட பறவைகள் தற்போது கூடுகட்டி இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூர்குளத்தில் வட ஐரோப்பாவிலிருந்து நாமத்தலை வாத்துகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன.

மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், நெல்லை மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கை சங்கம், முத்துநகர் இயற்கைக் கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து 16-வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு பணியை வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடத்துகின்றன.

தாமிரபரணி பாசன பகுதிகளான "தென் தமிழகத்தின் நெற்களஞ்சியம்" என அழைக்கப்படும் இந்த பகுதியில், காடுகளில் மட்டுமன்றி ஊர்ப்புறங்களிலும் பல்லுயிர்கள் செழித்துள்ளன. இம்மாவட்டங்களின் குளங்கள் நீர்ப்பறவைகளின் சொர்க்கபூமியாக விளங்குகின்றன.

இங்கு சுமார் 100 சிற்றினங்களைச் சேர்ந்த நீர்ப்பறவைகள் காணப்படுகின்றன. அவற்றில் 30-க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உலகின் பிற பகுதிகளிலிருந்து நமது பகுதிகளுக்கு வலசை வரும் பறவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

16-வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி அன்று 3 இடங்களில் நடைபெற உள்ளன. நெல்லை மாவட்ட தன்னார்வலர்களுக்கு மாவட்ட அறிவியல் மையத்தில் பிற்பகல் 2.30 மணிக்கும், தூத்துக்குடி மாவட்ட தன்னார்வலர்களுக்கு சாயர்புரம் போப் கல்லூரியில் பிற்பகல் 2.30 மணிக்கும், தென்காசி மாவட்ட தன்னார்வலர்களுக்கு ஆய்குடி ஜே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பகல் 11 மணிக்கும் பயிற்சி நடக்கிறது.

18 வயது நிரம்பிய அனைவரும் இந்தக் கணக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம். இணையத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story