சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தின்போது.. ‘பாரத மாதாவுக்கு ஜே' என கோஷம் - அமைச்சர்கள் கண்டனம்


சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தின்போது.. ‘பாரத மாதாவுக்கு ஜே என கோஷம் - அமைச்சர்கள் கண்டனம்
x

‘பாரத மாதாவுக்கு ஜே' என கோஷம் எழுப்பிய இந்து அமைப்பினர்களால் பரபரப்பு நிலவியது.

கன்னியாகுமரி

சுசீந்திரம்,

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நேற்று மார்கழி திருவிழா தேரோட்டம் நடந்தது. காலை 9.15 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் சுவாமி விக்கிரகங்களை கோவிலில் இருந்து வெளியே எடுத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது. உடனே இந்து அமைப்பினர் கோவில் நிர்வாகத்திடம் நேரம் ஆகிக் கொண்டே இருக்கிறது. யாருக்காக விக்கிரகங்களை எடுத்து வராமல் இருக்கிறீர்கள் என கூறியபடி இருந்தனர்.

இதற்கிடையே தேரோட்டத்தை தொடங்கி வைக்க அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் வந்தனர். அப்போது பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் மற்றும் இந்து அமைப்பினர் ஓம் காளி, ஜெய் காளி என ஓடியபடி கோஷமிட்டனர். மேலும் சாவர்க்கர் வாழ்க, சாவர்க்கர் வாழ்க என விடாமல் முழக்கமிட்டனர். இதுதவிர பாரத மாதாவுக்கு ஜே என்ற கோஷமும் எதிரொலித்தது. மேலும் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

உடனே அமைச்சர் சேகர்பாபு, இந்த கோஷத்தை இங்கு எழுப்பாதீர்கள் என கோபத்துடன் கூறினார். ஆனால் அவர்கள் முழக்கமிட்ட கோஷத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து அங்கு கோஷம் எழுப்பியபடி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்து விட்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், "இறை வழிபாட்டின் போது தேவையில்லாத கோஷங்களை சிலர் எழுப்பி வருகிறார்கள். கோஷங்களை எழுப்புபவர்களிடம், இதுபோன்ற தேவையில்லாதவற்றை எழுப்பாதீர்கள் என கேட்டுகொள்கிறேன்" என்றார்.

மேலும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலின் மார்கழி தேர் திருவிழா நிகழ்ச்சியில் பா.ஜனதா மற்றும் ஒருசில மதவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தேரை வடம் பிடித்து இழுக்கிற நேரத்தில் மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கர் வாழ்க, சாவர்க்கர் வாழ்க என்று முழக்கமிடுகிறார்கள்.

அவருக்கும், தாணுமாலயசாமி கோவிலுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? . இது எதற்காக என்றால் பா.ஜனதாவும், மதவாத அமைப்புகளும் திருக்கோவில்களில் நுழைந்து அங்குள்ள மக்களிடம் தவறான கருத்துகளை கொண்டு செல்கின்ற முயற்சியை மிகத்தெளிவாக காட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய ஒரு செயல். அவர்கள் மீதான நடவடிக்கையை காவல்துறை பார்த்துக் கொள்ளும்.மதத்தை வைத்து அரசியல் செய்வது தான் பா.ஜனதாவின் ஒரே நோக்கமாக இருக்கிறது என்பது மிகத்தெளிவாக தெரிந்துள்ளது” என்று அவர் கூறினார்.

1 More update

Next Story