தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2 பேர் கைது

தாளமுத்துநகர் போலீஸ் சரகம், மாப்பிள்ளையூரணி சந்திப்பு பகுதியில் போலி லாட்டரி விற்பனை செய்யபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தூத்துக்குடியில் உள்ள துறைமுகம், அனல்மின் நிலையம், உப்பளங்கள் மற்றும் ஏராளமான தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து சமீப காலமாக ஒரு கும்பல் போலி லாட்டரி விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக போலியாக ஈ-மெயில் ஐடி, வாட்ஸ் அப் குருப், மற்றும் பல்வேறு பெயர்களின் சமூக வலைதளங்கள் தொடங்கி அதன் மூலம் தொழிலாளர்களிடம் தினசரி ரூ.300 முதல் ரூ.500 வரை பணத்தை பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், நகர ஏ.எஸ்.பி. மதன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் தென்பாகம், மத்திய பாகம், வடபாகம், தாளமுத்துநகர், தெர்மல்நகர், முத்தையாபுரம் மற்றும் சிப்காட், புதுக்கோட்டை ஆகிய காவல் சரக போலீசார் இதில் கவனம் செலுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தாளமுத்துநகர் போலீஸ் சரகம், மாப்பிள்ளையூரணி சந்திப்பு பகுதியில் போலி லாட்டரி விற்பனை செய்யபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போலி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 53) சிலுவைப்பட்டியை சேர்ந்த காசிலிங்கம்(38) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த போலி நம்பர் லாட்டரிகள், அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரிகளை பறிமுதல் செய்து மேற்கொண்ட விசாரணையில் தொழிலாளர்களை குறிவைத்து அதிக விலைக்கு போலி லாட்டரிகளை விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர். இதுபோல் போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் கும்பலை ஒட்டுமொத்தமாக கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






