தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 18 சதவீதம் சரிவு; காரணம் என்ன?

குழந்தை வளர்ப்பில் கல்வி, சுகாதாரம், எதிர்கால வாழ்க்கைத்தரம் ஆகியவற்றுக்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவடைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 18 சதவீதம் வீழ்ச்சி அடைந்து உள்ளது என ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு விகிதம் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மட்டும் குறைவதற்கான காரணம் குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அவர்கள் கூறும்போது, கடந்த 1990-ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் குழந்தை பிறப்பு என்பது குடும்ப வாழ்க்கையின் இயல்பான அம்சமாகவே இருந்தது. திருமணத்துக்கு பிறகு விரைவில் கர்ப்பம், இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்ற நிலை சாதாரணமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. பெண்களின் கல்வி உயர்ந்துள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. திருமண வயது உயர்ந்ததால், குழந்தை பெறும் காலம் தள்ளிப்போயுள்ளது.
குழந்தை வளர்ப்பில் கல்வி, சுகாதாரம், எதிர்கால வாழ்க்கைத்தரம் ஆகியவற்றுக்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்ற மனநிலை வலுப்பெற்றுள்ளது. மேலும், குடும்ப நல திட்டங்கள், கருத்தடை வசதிகள், மகப்பேறு விழிப்புணர்வு சேவைகள் தமிழகத்தில் முன்பே தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. நகரமயமாக்கல், கல்வி போட்டி, வேலைவாய்ப்பு அழுத்தம் ஆகியவை பிற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகமாக இருப்பதும் பிறப்பு எண்ணிக்கை குறைவதற்கு காரணமாக உள்ளது என அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 9 லட்சத்து 45 ஆயிரத்து 842 குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள். அதாவது தினமும் சராசரியாக 2 ஆயிரத்து 591 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு, நேற்று வரை பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 928 ஆக இருக்கிறது. அதன்படி சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 138 குழந்தைகள்தான் பிறந்துள்ளனர்.
இன்னும் டிசம்பர் மாதம் முடிய 18 நாட்கள் மட்டுமே இருப்பதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 7 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறக்க வாய்ப்பு இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 6 ஆண்டுகளில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 18 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.3 முதல் 1.5 சதவீதம் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வந்த போதிலும் தமிழகத்தில் மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 3.1 சதவீதம் அளவுக்கு பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.






