இன்ஸ்டாகிராம் காதல்... 42 வயதில் ஐ.டி. ஊழியரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்

தனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை ஐ.டி. ஊழியரிடம் மகாஸ்ரீ மறைத்துள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஸ்ரீதருக்கும், நெல்லை மாவட்டம் சிவந்திபுரத்தைச் சேர்ந்த மகாஸ்ரீ என்ற 42 வயது பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வரும் மகாஸ்ரீ, தனது உண்மையான வயதை மறைத்து தனக்கு 30 வயதுதான் ஆகிறது என்று கூறி ஸ்ரீதரை ஏமாற்றி வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மகாஸ்ரீக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர். ஆனால் இதை ஸ்ரீதரிடம் இருந்து அவர் மறைத்துள்ளார். இதற்கிடையில் ஸ்ரீதரும் தனது இன்ஸ்டாகிராம் காதலி மகாஸ்ரீயை திருமணம் செய்ய தயாரானார். இதன்படி இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த நவம்பர் 30-ந்தேதி நாமக்கல்லில் மகாஸ்ரீயை ஸ்ரீதர் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தகவல் மகாஸ்ரீயின் முதல் கணவரின் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக நாமக்கல் வந்து, மகாஸ்ரீ பற்றிய உண்மையை ஸ்ரீதரின் உறவினர்களிடம் தெரியப்படுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீதரின் குடும்பத்தினர் பரமத்திவேலுார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






