‘நாகூர் ஹனீபாவின் குரல் மதங்களை கடந்து அனைவராலும் நேசிக்கப்படுகிறது’ - உதயநிதி ஸ்டாலின்

நாகூர் ஹனீபா பாடிய பிறகுதான் திராவிட இயக்கத்தின் மாநாடுகள் தொடங்கும் என உதயநிதி ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.
நாகப்பட்டினம்,
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (20.12.2025) நாகூர் சில்லடி கடற்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலதன மானிய நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகிவற்றின் மூலம் 1.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இசை முரசு நாகூர் இ.எம்.ஹனீபாவின் நூற்றாண்டு பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்ற இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவின் நூற்றாண்டு விழாவினையொட்டி அமைக்கப்பட்ட அவரது வாழ்க்கை வரலாறு குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரினை” வெளியிட்டு, இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவின் குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;-
“இசை முரசு நாகூர் ஹனீபாவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியிலே உங்களோடு சேர்ந்து நானும் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நாகையில் அமைந்திருக்கக்கூடிய டாக்டர் ஜெயலலிதா மீனவ பல்கலைகழகத்தில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த பெயரையும் நம்முடைய முதல்-அமைச்சர்தான் சட்டப்போராட்டம் நடத்தி காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு கூடுதல் பெருமை.
இன்றைக்கு இந்தியாவுக்கே முன்மாதிரியான மாவட்டமாக, ஒரு வழிகாட்டக் கூடிய மாவட்டமாக இந்த நாகை மாவட்டம் விளங்கிக்கொண்டிருக்கிறது. ஏன் என்றால், இங்குதான் சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் இருக்கிறது, வேளாங்கண்ணி சர்ச்சும் இருக்கிறது, நாகூர் தர்காவும் இருக்கிறது. சாதி, மதம் பார்க்காமல், எல்லாரும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய மண், இந்த நாகை மண்.
இசைமுரசு நாகூர் ஹனிபா கடைசி வரை தனக்கு ‘ஒரே இறைவன், ஒரே தலைவன், ஒரே இயக்கம்’ என்று வாழ்ந்த பெருமைக்குரியவர். 1957ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் தன்னுடைய முதல் தேர்தலை சந்திக்கும்போது, பேரறிஞர் அண்ணாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த நாகப்பட்டினம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் நாகூர் ஹனீபா. அந்த அளவிற்கு தன்னுடைய இளம் வயதிலேயே அண்ணாவின் நம்பிக்கையை பெற்றவர் நம்முடைய இசைமுரசு.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரும் நம்முடைய இசை முரசு ஹனீபாவும் கிட்டத்தட்ட சம வயது உடையவர்கள்தான். தமிழ்நாட்டு அரசியல் மேடை என்று சொன்னாலே இரண்டு குரல்கள் மட்டும் எப்போதுமே தனித்துவமாக தெரியும். அதில் ஒன்று முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேச்சுக் குரல். இன்னொன்று இசை முரசு நாகூர் ஹனீபாவின் பாட்டுக் குரல்.
இரண்டுக்குமே ஒரு ஒற்றுமை உண்டு, என்னவென்றால், இரண்டுமே கழகத்தினுடைய கொள்கை குரல்களாக விளங்கி கொண்டிருந்தது. இந்த இரண்டு குரல்களையும் தமிழ்நாட்டிற்கு தந்த பெருமை, நம்முடைய நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உண்டு. இந்த இரண்டு குரல்களும் தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில், தொடர்ந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்த பெருமைக்குரிய குரல்கள்.
சென்ற வருடம் கலைஞரின் நூற்றாண்டு விழா, இந்த வருடம் நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழாவை நாம் இவ்வளவு சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, நமக்குப் பெருமை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. இது வரலாறு நமக்கு தந்திருக்கக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பு.
தமிழ்நாட்டுக்காக உழைத்த அனைத்து திராவிட தலைவர்களுக்கும் நூற்றாண்டு விழா எடுக்கின்ற வகையில், மீண்டும் திராவிட மாடல் அரசே நிச்சயம் அமையும் என்ற அந்த நம்பிக்கையும் நமக்கு இருக்கின்றது. இசைமுரசு நாகூர் ஹனீபா எப்படி திராவிட இயக்கக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார் என்று இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு வந்திருக்கக்கூடிய பெரியவர்கள் அதை இளைஞர்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
நாகூர் ஹனீபாவின் அப்பா முகம்மது இஸ்மாயில், மலேசியாவின் கோலாலம்பூர் ரெயில்வேயில் வேலை செய்து கொண்டிருந்தார். 1935 ஆம் ஆண்டு, அப்போது ஹனீபாவுக்கு பதினைந்து வயது. அவருடைய அப்பா படிக்க வேண்டும் என்று, தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்று, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தினசரி பத்திரிகைகளை எல்லாம் அவர் சேகரிப்பார்.
அந்த பத்திரிகைகளை எல்லாம், நாகையில் இருந்து மலேசியா போகின்ற கப்பலில் அனுப்பி வைத்து தன்னுடைய தந்தைக்கு சென்று கிடைக்குமாறு பார்த்துக் கொண்டார். அப்படி அப்பாவுக்கு அனுப்புவதற்கு முன்னால், அந்த பத்திரிக்கைகளை அவரும் படிக்க ஆரம்பித்தார். அப்படி தான், தந்தை பெரியாரின் ‘குடியரசு’, பத்திரிகையை இசைமுரசு அவர்கள் படிக்க நேர்ந்தார். இந்த நேரத்தில் ஒரு வரலாற்று ஒற்றுமையை இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
எப்படி நாகூரில், சிறுவனாக இருந்த, ஹனீபா குடியரசு பத்திரிகையை படித்தாரோ, அதே மாதிரி, இங்கு பக்கத்தில் இருக்கக்கூடிய திருக்குவளையில சிறுவனாக இருந்த, கலைஞரும் அதே நேரத்தில் குடியரசு பத்திரிகையை படிக்க நேர்ந்தார்.
குடியரசு மூலமாக, சுயமரியாதை கருத்துகளை எல்லாம் உள்வாங்கி ஒரு பக்கம், கலைஞரின் பேச்சுக் குரலும், இன்னொரு பக்கம், ஹனீபாவின் பாட்டுக் குரலும் தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த சமயத்தில்தான், இந்தி திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் முதல் மொழிப் போரை அறிவித்தார். அந்தப் போராட்டம்தான், இசை முரசு ஹனீபாவையும், கலைஞரையும் அன்றைக்கு போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தது.
இந்தி திணிப்பை எதிர்த்து தன்னுடைய 14 வயதில் திருவாரூர் வீதியில் போராட்டத்தில் இறங்கினார் டாக்டர் கலைஞர். கலைஞரைவிட 2 வயது இளையவரான இசை முரசு, நாகூர் வீதியில் இந்தியை எதிர்த்து ஊர்வலம் போனார். இந்த வரலாற்றை இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அன்றைக்கு பெரியார் தலைமையிலும், பின்னர் அண்ணா தலைமையிலும் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போரில் அன்றைக்கு தமிழ்நாடு வென்று காட்டியது. இன்றைக்கு அதே இந்தி திணிப்பு வேறு ஒரு ரூபத்தில் மீண்டும் தமிழ்நாட்டிற்குள் நுழையப்பார்க்கிறது.
மத்திய அரசு இன்றைக்கு மும்மொழிக் கொள்கை என்று சொல்லி, மீண்டும் இந்தியை தமிழ்நாட்டிற்குள் திணிக்க முயற்சி செய்கிறது. இந்தியை ஏற்றுக் கொண்டால், மும்மொழிக் கொள்கைளை ஏற்றுக் கொண்டால்தான், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய மக்களுடைய வரிப்பணம் 2,000 கோடி ரூபாயை தருவோம் என்று மத்திய அமைச்சர் சொல்கிறார்.
ஆனால், நம்முடைய முதல்-அமைச்சர் நீங்கள் 2,000 கோடி இல்லை, 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் எந்த காலத்திலும் தமிழ்நாட்டிற்குள் இந்தி திணிப்பை நான் நுழையவிட மாட்டேன் என்று தைரியமாக சொல்கிறார். ஏன் என்றால், நம்முடைய முதல்-அமைச்சருக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியும், தமிழ் மொழிக்காக நடந்த போராட்டங்கள் தெரியும். அதனால்தான் தமிழ்நாட்டில் எப்போதுமே இருமொழி கொள்கைதான் இருக்கும் என்று நம்முடைய முதல்-அமைச்சர் தைரியமாக துணிச்சலாக சொல்கிறார்.
நாகூர் ஹனிபாவின் காலடிச்சுவடுகள் இந்த மண்ணில் இருக்கின்ற வரைக்கும், அவருடைய குரல் இந்த காற்றில் கலந்திருக்கின்ற வரைக்கும் தமிழ்நாடு ஒரு போதும் இந்தி திணிப்பை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காது என்பதை உறுதியோடு உங்கள் முன்பு சொல்கின்றேன்.
நாகூர் ஹனீபா பாடிய திராவிட இயக்கப் பாடல்களும், இஸ்லாமியப் பாடல்களும் என்றைக்குமே நம்முடைய காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இன்னும் சொல்லவேண்டும் என்றால், அவர் பாடிய பிறகுதான் திராவிட இயக்கத்தினுடைய மாநாடுகள் தொடங்கும்.
நாகூர் ஹனீபா சட்டமன்ற மேலவை உறுப்பினராக, வக்பு வாரியத் தலைவராக இருந்து நாட்டு மக்களுக்கும் இஸ்லாமிய பெரு மக்களுக்கும் சிறப்பாக தொண்டாற்றினார். அவருக்கு டாக்டர் கலைஞர்தான் கலைமாமணி விருதினை வழங்கி சிறப்பித்தார்.
2015-ஆம் ஆண்டு நாகூர் ஹனீபா மறைந்தபோது, கலைஞரால் அந்த துக்கத்தை தாங்க முடியாமல், நேரடியாக சென்னையில் உள்ள வீட்டிற்கு சென்று தன்னுடைய இறுதி அஞ்சலியை செலுத்தி கண்ணீர் விட்டு அழுதார் டாக்டர் கலைஞர்.
பிறகு இந்த நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், நம்முடைய முதல்-அமைச்சர் கலந்து கொண்டு நாகூர் ஹனீபாவின் படத்தை திறந்து வைத்து சிறப்பு உரையாற்றினார். மேலும், நம்முடைய முதல்-அமைச்சர், நாகூர் தைக்கால் தெருவிற்கு “இசை முரசு நாகூர் இ.எம். ஹனீபா தெரு” என்று பெயரிட்டார்.
அதே போல், நாகூர் சில்லடி கடற்கரை சாலையில் உள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு “இசை முரசு நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு பூங்கா” என்றும், பெயர் சூட்டி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது, நானும் நம்முடைய அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துவிட்டுதான் இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றோம்.
எனவே, இந்த மண்ணில் திராவிட இயக்கம் உள்ள வரைக்கும், இஸ்லாமிய நெறி உள்ள வரைக்கும், இசை முரசு நாகூர் ஹனீபாவின் குரல் எப்போதும் நிச்சயம் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






