சிகிச்சை முடிந்து நல்லகண்ணு வீடு திரும்பினார்

வயது முதிர்வு மற்றும் உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்ட அவர் கடந்த மாதம் இறுதியில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சென்னை,
பழம்பெரும் அரசியல் தலைவா் நல்லகண்ணு (வயது 101). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அவர் அவ்வப்போது, நுரையீரல், சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பி வருகிறார்.
கடந்த டிசம்பர் 26-ந்தேதி 101 வயது அடைந்ததும், ஒரு சில நபர்களே அவரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை கூற அனுமதிக்கப்பட்டனர். கட்சியின் தொண்டா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. வயது முதிர்வு மற்றும் உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வரும் அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் அவருக்கு சிறுநீா்ப்பாதை தொற்று ஏற்பட்டது. இதனால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அவருடைய உடல்நிலையை மருத்துவ குழுவினா் கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வந்தனா்.
அரசு மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறியது. இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டார்.
இந்நிலையில், உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.






