கறிக்கோழி வளர்ப்புக் கூலியை கிலோவிற்கு ரூ.20 உயர்த்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


கறிக்கோழி வளர்ப்புக் கூலியை கிலோவிற்கு ரூ.20 உயர்த்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாட்டில் தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கோழி வளர்ப்புத் தொழிலை மேற்கொண்டு வருகின்ற நிலையில், கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி முதல் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கறிக்கோழி பண்ணைகள் பெரிய நிறுவனங்களிடமிருந்து கோழிக் குஞ்சுகளைப் பெற்று, 42 நாட்கள் வரை வளர்த்து கறிக்கோழிகளாக அளிக்கின்றன. கோழி எடையின் அடிப்படையில், ஒரு கிலோவுக்கு 6 ரூபாய் 50 காசு கறிக்கோழி பண்ணைகளுக்கு அளிக்கப்படும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட இந்தக் கூலியை உயர்த்த வலியுறுத்தி கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரிய நிறுவனங்களிடமிருந்து குஞ்சுகளை வாங்கி வளர்த்து தர மறுக்கும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், கோழிகளை வளர்க்கத் தேவையான தென் நார்க் கழிவுகள், மரக்கரி, தொழிலாளர்கள் சம்பளம், மின் கட்டணம், மருந்துகள் ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது என்றும், இதன் காரணமாக குஞ்சுகளை வளர்ப்பதற்கான செலவு பத்து மடங்கு உயர்ந்துவிட்டதாகவும், அதே சமயத்தில் குஞ்சுகளை வளர்க்கும் பண்ணைகளுக்கு வழங்கும் தொகையை பெரிய நிறுவனங்கள் உயர்த்த மறுப்பதாகவும், கறிக்கோழி வளர்ப்புக்கான விலை கிலோ 6 ரூபாய் 50 காசிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்றும் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் போராட்டத்தின் விளைவாக, ஒரு கிலோ சிக்கன் விலை முந்நூறு ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த பிரச்சனை தொடர்பாக வருகின்ற 21.01.2026 அன்று கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கறிக்கோழிப் பண்ணை விவசாயிகளின் அறப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளை பொய்ப் புகார்களின் பேரில் தமிழக அரசு கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. அரசின் இந்த விவசாய விரோதப் போக்கு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்குச் சமம்.

முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி கறிக்கோழி வளர்ப்புக் கூலியினை ஒரு கிலோவிற்கு ரூ.20 என உயர்த்தி வழங்க ஆவன செய்து கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story