ராமநாதபுரம்: காக்கூர் கிராமத்தில் ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

ராஜகோபால சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் கிராமத்தில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி (கிருஷ்ணர்) ஆலயம் உள்ளது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு இதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த வாரம் முகூர்த்தக்கால் நடுதல், காப்புக்கட்டுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இன்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கும்ப அலங்காரம், கணபதி வழிபாடு, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த பின், கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோபுர கலசம் மற்றும் மூலவர்களுக்கு சிவாச்சாரியார், வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்கள் மீது அபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் ராஜகோபால சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்கிழ்ச்சியில் மாநிலங்களவை எம்பி தர்மர், அமைச்சர் ராஜ கண்ணப்பன் மகன் பிரபு ராஜ கண்ணப்பன், முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் மற்றும் முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






