தலைமை தேர்தல் அலுவலரின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது - இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி

மேலும் 10 லட்சம் வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது என வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த 04.12.2025 ஆம் தேதி தொடங்கிய, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறை நிறைவடைந்து சென்ற 19.12.2025 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் இறந்தவர்கள் தவிர மற்றவர்கள் மீண்டும் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் வழங்கிய கணக்கெடுப்புப் படிவத்தை முறையாக, முழுமையாக பூர்த்தி செய்யாதவர்கள் என மேலும் 10 லட்சம் வாக்காளர்களுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்புவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒரு வீட்டுக்கு குறைந்தபட்சம் மூன்று முறை செல்வார்கள் என்பது நடைமுறையில் பெரும்பாலும் நடக்கவில்லை. அதிகபட்சம் ஒரு முறை, சில பகுதிகளில் இருமுறை மட்டுமே சென்றுள்ளனர். அப்படிச் சென்றவர்கள், கணக்கெடுப்பு படிவத்தில் கையெழுத்து போடுங்கள், மற்றவைகளை பூர்த்தி செய்து கொள்வதாக கூறி, உடனடியாக திரும்பப் பெற்று சென்றுள்ளனர்.
தலைமை தேர்தல் அலுவலரும், கணக்கெடுப்பு படிவத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தால் போதும் என ஊடகங்களில் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மேலும் 10 லட்சம் வாக்காளர்களை நீக்கும் நோக்கத்துடன் விளக்கம் கோரும் கடிதம் அனுப்பப்படுகிறதோ என ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.
இந்த குளறுபடியான சிறப்புத் தீவிர திருத்த முறையால் வரும் சட்டமன்றத் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுமா? வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியுமா? என்ற வினாக்களும் எழுகின்றன.
இந்தக் குழப்பமான சூழலை கருத்தில் கொண்டு, சிறப்புத் தீவிர திருத்த முறை வரைவு வாக்காளர் பட்டியலை இறுதி செய்வதை நிறுத்தி வைத்து, நடப்பில் உள்ள பழைய வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்து, இறந்தவர்களை நீக்கும் சாதாரண சுருக்க முறை திருத்தத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடித்து விட்டு, அடுத்து வரும் காலத்தில் போதுமான கால அவகாசம் கொடுத்து, வெளிப்படையாக துல்லியமான வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, இந்தியத் தேர்தல் ஆணையத்தையும், தலைமை தேர்தல் ஆணையரையும் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






