இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Jun 2025 4:19 PM IST
விண்வெளி நிலையத்தில் தடம் பதித்தார் சுபான்ஷு சுக்லா
28 மணி நேரத்தில் 418 கி.மீ. பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது டிராகன். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தடம் பதித்தார் இந்தியாவின் சுபான்ஷி சுக்லா. சுக்லாவுடன் போலந்து, ஹங்கேரி, அமெரிக்க வீரர்களும் விண்வெளி நிலையத்தில் கால் பதித்தனர்.
சர்வதேச விண்வெளி மையம் சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் சுபான்ஷு சுக்லா.ராகேஷ் சர்மாவிற்கு அடுத்தாக விண்வெளி சென்ற 2-வது இந்திய வீரராகிறார் சுபான்ஷு சுக்லா. விண்வெளி சென்ற முதல் இந்தியர் ராகேஷ் சர்மா, விண்வெளி ஆய்வு மையம் சென்ற இந்தியர் சுபான்ஷு. சுக்லா உட்பட 4 வீரர்களும் விண்வெளி ஆய்வு மையத்தில் 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்கின்றனர்.
- 26 Jun 2025 3:21 PM IST
சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைகிறார் இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா
இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைய உள்ளனர். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் சுபன்ஷு சுக்லா.
- 26 Jun 2025 3:06 PM IST
மூதாட்டி கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி ஆனந்த் பாபுவை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- 26 Jun 2025 2:36 PM IST
அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏவின் பதவியை பறித்த ராமதாஸ்
அன்புமணி ஆதரவாளரான தருமபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஷ்வரனின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். வெங்கடேஷ்வரனுக்கு பதிலாக சரவணன் என்பவரை நியமித்துள்ளார்.
- 26 Jun 2025 2:00 PM IST
எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை, நம் மொழியை போற்ற வேண்டும் - அமித்ஷா
எந்த அந்நிய மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக்கூடாது என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை.. ஆனால் நம் மொழியை போற்ற வேண்டும்.. நம் மொழியை பேச வேண்டும், நம் மொழியில் சிந்திக்க வேண்டும். அடிமைத்தனத்தின் மனநிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்” என்று அமித்ஷா தெரிவித்தார்.
ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்பட வேண்டிய காலம் வரும் என்று பேசி இருந்தநிலையில் அமித்ஷா இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
- 26 Jun 2025 1:41 PM IST
கோவை, நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 26) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 26 Jun 2025 1:31 PM IST
மூதாட்டியை அடித்துக் கொன்ற அதிமுக நிர்வாகி கைது
திருவாரூர் மாவட்டம் வெட்டிக்காடு கிராமத்தில், வீட்டுக்குள் மாடு புகுந்ததை கண்டித்ததால், 82 வயது மூதாட்டி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகி ஆனந்த் பாபு என்பவர் கைது செய்யப்பட்டார்.
இரு தினங்களுக்கு முன்பு ஆனந்த் பாபு கைதான நிலையில், அவரின் தாயாரை போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 26 Jun 2025 1:25 PM IST
நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (27.06.2025)
நாளை (ஜூன் 27-ந் தேதி) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.
"கண்ணப்பா"
தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ். காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.
- 26 Jun 2025 1:18 PM IST
தகுதிவாய்ந்த பெண்களுக்கு விரைவில் ரூ.1,000 வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்
மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்களுக்கு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ரூ.1,000 வழங்கப்படும் என்று திருப்பத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். - 26 Jun 2025 1:16 PM IST
போதைபொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் கிருஷ்ணா கைது
கேரளாவில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்ட நடிகர் கிருஷ்ணா, நேற்று போலீசார் முன்பு ஆஜரானர். இதையடுத்து, கிருஷ்ணாவிடம் நேற்று முதல் தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்தனர்.
ஒருபக்கம் விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே, மற்றொரு பக்கம் பெசண்ட் நகரில் உள்ள கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். உயர் ரக போதைப்பொருள் பயன்படுத்தும் அளவுக்கு தனது உடல் ஒத்துழைக்காது எனவும் இரப்பை பிரச்சினைகள் இருப்பதாகவும் போலீசாரிடம் கிருஷ்ணா கூறியதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, நடிகர் கிருஷ்ணா தனது நண்பர்களிடம் சங்கேத வார்த்தைகளில் (Code word) தனது நண்பர்களிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கேத வார்த்தைகளின் அர்த்தம் என்ன? அதற்கும் போதைப்பொருளுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போதைபொருள் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.















