இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 May 2025 3:56 PM IST
நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
- 28 May 2025 2:42 PM IST
கமல் பேசியது உண்மை; சத்தியம் - சீமான்
கன்னட மொழி குறித்து கமல் பேசியது உண்மை; சத்தியத்திலும் சத்தியம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாமே தமிழில் இருந்து வந்த மொழிகள்தான். தன் வரலாற்றை அறிந்து கொள்ளாத, உண்மையை உணராத கூட்டம் அவரை எதிர்க்கிறது. கர்நாடகாவில் கமலுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
- 28 May 2025 2:12 PM IST
கமலுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்
நடிகர் கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியாது. கன்னடமொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது கமலுக்கு தெரியவில்லை.வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கமல் பேசியிருந்ததற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
- 28 May 2025 1:52 PM IST
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு வீட்டில் இருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மறைமலைநகரை சேர்ந்த நபருக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு உறுதியானது.
- 28 May 2025 1:36 PM IST
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை திடீர் உயர்வு
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை லிட்டருக்கு ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்ந்துள்ளது. பீர் வகைகள் லிட்டருக்கு ரூ.30 வரை விலை உயர்வு, மதுபானங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக புதுச்சேரி கலால் துறை அறிவித்துள்ளது.
- 28 May 2025 1:34 PM IST
மே 29,30ல் கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- 28 May 2025 12:51 PM IST
ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும் - நயினார் நாகேந்திரன்
ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும்; மனம் தளராது நீதிக்காக போராடி வெற்றி கண்ட அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாராட்டுகள் ஞானசேகரன் குற்றவாளி என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வரவேற்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
- 28 May 2025 12:41 PM IST
இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மே 29, 30 ஆகிய 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இன்று (மே 28) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.
- 28 May 2025 11:21 AM IST
சூரை மீன்பிடி துறைமுக திறப்பு விழாவுக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.















