கூடலூர்-ஓவேலி சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

கவனமாக செல்ல வேண்டுமென வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் நீடித்து வந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். பலாப்பழ சீசன் நிலவுவதால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. மேலும் சீசன் முடிவடைந்த உடன் காட்டு யானைகள் தொந்தரவு குறைந்து விடும் என வனத்துறையினர் கூறி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காட்டு யானைகள் நடமாட்டம் சற்று குறைந்து காணப்படுகிறது.தற்போது கடும் பனிப்பொழிவு மற்றும் பகலில் வெயில் அடிப்பதால் வனப்பகுதியில் பசும்புற்கள் காய்ந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.
கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சிக்கு செல்லும் சாலையில் ராக்லேன்ட் தெரு, கெவிப்பாரா, காமராஜ் நகர், சூண்டி, பெரிய சூண்டி என பல்வேறு கிராமங்கள் உள்ளது. இதில் கெவிப்பாரா எஸ்டேட் பகுதியில் கடந்த 2 நாட்களாக குட்டிகளுடன் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. சில சமயங்களில் கூடலூர்-ஓவேலி சாலையில் காட்டு யானைகள் வந்து முகாமிடுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க வன ஊழியர்கள் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் கூடலூரில் இருந்து அருகே உள்ள கிராமங்களுக்கு பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். இதனால் போலீஸ் மற்றும் வனத்துறை சோதனை சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து எச்சரித்து வருகின்றனர்.






