அ.தி.மு.க.வை வீழ்த்த தி.மு.க. பல்வேறு அவதாரங்களை எடுத்தது - எடப்பாடி பழனிசாமி பேச்சு


அ.தி.மு.க.வை வீழ்த்த தி.மு.க. பல்வேறு அவதாரங்களை எடுத்தது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 5 April 2024 6:46 PM IST (Updated: 5 April 2024 7:02 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. எம்.பி.க்கள் தமிழக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபி கவுந்தம்பாடியில் திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அ.தி.மு.க.வை வீழ்த்த தி.மு.க. பல்வேறு அவதாரங்களை எடுத்தது. அ.தி.மு.க.வை அழிக்க மு.க.ஸ்டாலினின் எடுத்த திட்டங்கள் தூள், தூளாக்கப்பட்டன. அ.தி.மு.க. தலைவர்கள் மக்களுக்காக பாடுபடுவர்கள்; வேறுசிலர் குடும்பத்திற்காக பாடுபடுகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் அடித்தட்டு மக்களுக்காக பல திட்டங்கள் கிடைத்தன. அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்தவர்கள் தானாக அழிந்து விடுவார்கள். அ.தி.மு.க.வை முடக்க நினைத்ததை மக்கள் துணையோடு தவிடுபொடியாக்கினோம். அ.தி.மு.க.வின் அழுத்தத்தால்தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. தி.மு.க. எம்.பி.க்கள் தமிழக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில், கர்நாடகாவிடம் பேசி தண்ணீரை பெற முயற்சிக்காதது ஏன்?.

அ.தி.மு.க. ஆட்சியில் நீர்மேலாண்மையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்தது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பல திட்டங்களை கொண்டுவந்தோம். அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1,658 கோடியில் 85 சதவீதம் பணிகள் நிறைவடைந்தன. அ.தி.மு.க. ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு நிலத்தடி நீர் உயர்த்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story