தேர்தல் காலத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வட்டமடிக்கிறார்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்


தேர்தல் காலத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வட்டமடிக்கிறார்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
x

பருவகாலத்தில் சரணாலயத்திற்கு வரும் பறவைபோல் தேர்தல் காலத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வட்டமடிக்கிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என உத்தரவாதம் தருவீர்களா? என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவதுபோல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் பிரதமர் மோடி அவர்களே,

குஜராத் மாடல் - சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கேரண்டி (உத்தரவாதம்) கார்டுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கு வந்திருக்கும் பிரதமர் மோடி அவர்களே...

இதோ இந்த கேரண்டிகளை (உத்தரவாதங்களை) தருவீர்களா?

* சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்; இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும்

* எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும்

* தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு

* ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது

* மாநில பட்டியலுக்குக் கல்வி மாற்றம்; கல்விக்கடன்கள் ரத்து

* ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் ரூ.400

* வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

* தாறுமாறாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பேன்; செஸ், சர் சார்ஜ் என்ற வரிக் கொள்ளை அறவே நீக்கம்

* அமலாக்கத்துறை - வருமான வரித்துறை - சி.பி.ஐ ஆகியவை சுதந்திரமாகச் செயல்படும்

* மாநிலங்களை வஞ்சிக்காத நியாயமான நிதிப் பகிர்வு தருவேன்

* வணிகர்களையும் சிறு குறு தொழில்களையும் வதைக்கும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம்

* கும்பல் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்

* வியாபம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை பா.ஜ.க.வின் ஊழல்கள் குறித்த வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுவேன்.

* கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை அனுமதிப்பேன்

* சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பேன்

* தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்பேன்; தாக்குதலை நிறுத்துவேன்

* அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வேன்

* வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி ஒதுக்கீடு

* சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒப்புக்கொண்டபடி ஒன்றிய அரசின் நிதி விடுவிப்பு

* தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக, திருக்குறளை தேசிய நூலாக, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுவேன்

* குடியுரிமை திருத்தச்சட்டத்தை வாபஸ் பெறுவேன்; சிறுபான்மை மக்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தமாட்டேன்

- என இதற்கெல்லாம் நீங்கள் கேரண்டி (உத்தரவாதம்) அளிக்கத் தயாரா?

இல்லையென்றால் உங்கள் கேரண்டி என்பது, ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும் மேட் இன் பா.ஜ.க. ('Made in BJP') வாஷிங் மெஷினுக்கு மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகும்.

#பதில்_சொல்லுங்க_மோடி!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story