டால்பினிஸி: இது டால்பின்களின் மொழி
டால்பினிஸி என்பது ஒரு மொழி. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் போன்றுதான் இதுவும். ஆனால் டால்பினிஸி மொழியை மனிதர்கள் பேசுவதில்லை. கடலில் வாழும் டால்பின்கள்தான் பேசுகின்றன.
டால்பின்கள் மற்ற விலங்குகள் போல அல்ல; ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கின்றன. சில சமயங்களில் வெகு தூரத்தில் இருக்கும் டால்பின்களுடன் இந்த மொழி மூலம் தொடர்பு கொள்கின்றன.
அதன் மொழி விசிலோசை போல இருக்கிறது. அதுவும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. 32 வகையான விசில் ஒலிகளை டால்பின்கள் எழுப்புவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த 32 வகை விசில்களும் ஒலி எழுத்துக்கள் என்கிறார்கள்.
வடிவமற்ற இந்த விசில் ஒலி ஒவ்வொன்றிற்கும் பொருள் உள்ளது. அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் டால்பின்களுக்குத்தான் இருக்கிறதாம். இந்த ஒலி எழுத்துக்களை டாக்டர் லில்லி என்பவர் ஒலிநாடாவில் பதிவு செய்துள்ளார். இன்று அமெரிக்காவில் டால்பின் பேசும் மொழியைத் தெளிவாகப் புரிந்து கொண்டு அதனுடன் பேசுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். இதில் வெற்றி கண்டுவிட்டால் பயிற்சி மூலம் டால்பின்களை நம் வசப்படுத்தி விடலாம்.
பயிற்சி பெற்ற டால்பின்களின் உதவியுடன் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் செல்லும் திசையைக்கூட அறிந்து கொள்ளமுடியும். பயிற்சி பெற்ற டால்பின்கள் வெடிகுண்டுகூட சுமந்துச் செல்லும். புயலில் திசை மாறிய கப்பலுக்கு வழிகாட்டும். தவறி கடலில் விழுந்தவர்களைக் காப்பாற்றும். கால ஓட்டத்தில் மனிதன் புதிய கருவிகளின் உதவியுடன் விலங்குகளுடன் பேசப் போகிறான். அப்படி மனிதனுடன் பேசப்போகும் முதல் விலங்கு டால்பினாகத்தான் இருக்கும்.