இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர்


இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர்
x

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி சமூக மேம்பாட்டிற்காக உழைத்தவர் என்ற பெருமைகளை கொண்டவர் டாக்டர் அம்பேத்கர். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக போராடிய அவரது வாழ்க்கை வரலாறு பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

மத்திய பிரதேசத்தில் உள்ள அம்பாவாதே என்னும் ஊரில் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்தார். இவரது பெற்றோர் ராம்ஜி மாலோஜி சக்பால் பீமாபாய் ஆவர். இவரது தந்தை ராணுவப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 'பீமாராவ் சக்பால் அம்பேவாதேகர் என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். பாபா சாகேப், பாபா, பீமா போன்ற பெயரும் உண்டு. அம்பேத்கர் தனது தொடக்க கல்வியை சாத்தாராவில் உள்ள தொடக்கப்பள்ளியில் படித்தார். மும்பைக்கு இவரது குடும்பம் குடி பெயர்ந்ததால் அங்குள்ள எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். குடும்பத்தில் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் படித்து மெட்ரிக் பள்ளியில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அம்பேத்கர் இளங்கலை பட்டம் பெற்றார்.

குடும்பச் சூழ்நிலையால் சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத்தலைவராக பணிபுரிந்தார். பிறகு அந்த வேலையை துறந்த இவர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சட்டம் ஆகிய பாடங்களைப் பயின்றார். உயர்கல்வி பயில்வதற்காக 1913-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார்.

அம்பேத்கர் 'பண்டைய இந்தியாவின் வாணிகம்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முதுகலை பட்டம் பெற்றார். 'இந்தியாவில் சாதிகள்' என்ற தலைப்பில் கட்டுரையும் எழுதினார். பிறகு பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட 'இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு' என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். இதற்காக கொலம்பிய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. அதன்பிறகே 'டாக்டர் அம்பேத்கர்' என்று அழைக்கப்பட்டார்.

அம்பேத்கர், 'பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்' என்ற ஆய்வுரைக்கு 1921-ம் ஆண்டு அறிவியல் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 'ரூபாயின் பிரச்சினை' என்ற ஆய்வுரைக்கு டி.எஸ்சி. பட்டத்தையும் பெற்றார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் அம்பேத்கர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அதில் சமுதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டு 'என் மக்களுக்கு என்ன நியாயமாக கிடைக்குமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்ஜிய கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்' என்று கூறினார். 'கல்வி பெறு, ஒன்று திரள், போராடு' என்று முழங்கி சாதியை எதிர்த்தும், தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும் போராடினார்.

சமூக சீர்திருத்தத்திற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் செயல்பட்டார். இந்து சட்டத் தொகுப்பு மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததால் தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். இவர் தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றி பொருளாதாரம் குறித்து மூன்று துறைசார் புத்தகங்களை எழுதினார்.

எழுத்தாளர், ஆசிரியர், புரட்சியாளர், சமூகத் தொண்டர் என பலதுறையில் பயணித்த அம்பேத்கர் 1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இறந்தார். அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' விருது 1990-ல் அவரது மறைவுக்கு பிறகு வழங்கப்பட்டது.


Next Story