ஹார்மோன்களை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்


ஹார்மோன்களை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்
x

முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம்.

மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும் நேரத்தையும் மாற்றிக் கொண்டுவிட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை.

முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி, அதில் ஏற்றத்தாழ்வை உருவாக்கலாம்.

அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை 6 மணிக்கு காபி அல்லது டீ, 8 மணிக்கு இரண்டு இட்லி, 10 மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர் இவற்றுடன் அளவான சாப்பாடு, 4 மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை 6 மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு 8 மணிக்கு மிதமான சிற்றுண்டி. இதுதான் சரியான உணவுப் பழக்கம். சிலர் வாரத்தில் 5 நாட்கள் இப்படிச் சாப்பிட்டுவிட்டு வார இறுதியில் தங்களுக்குப் பிடித்த உணவகங்களுக்குச் சென்று அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இதனால் வார நாட்களில் சோர்வும், மனதில் ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர உடல் எடை குறையாது.

சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப்பழக்கமும் ஒரு காரணம். பொதுவாக 30 வயதைக் கடந்துவிட்டாலே உணவு பிரமிடைப் பின்பற்ற வேண்டும். அதாவது கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளைக் குறைவாகவும், புரதமும், வைட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும்.

நம் உடலை உள்ளும் புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கியப் பங்கு உண்டு. தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது. பிறகு குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க முடியாது அல்லது பிடிக்காது. இவர்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றைக் குடிக்கலாம். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.


Next Story