'கடக்நாத்' கோழிகள்


கடக்நாத் கோழிகள்
x

கடக்நாத் கோழிகளின் முட்டையிலும் கறியிலும் அதிக அளவு புரதச் சத்தும் இரும்புச் சத்தும் உள்ளன.

முன்பெல்லாம் கோழி இறைச்சி என்றால் அது நாட்டுக்கோழிதான். அதேபோல் கோழி முட்டை என்றால் அதுவும் நாட்டுக்கோழி முட்டைதான். ஆனால், இன்று நிலைமையே மாறிவிட்டது. பெரும்பாலும் பண்ணை முறையில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் மற்றும் கூண்டில் அடைத்து வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளி்ன் இறைச்சியும் முட்டைகளும்தான் கிடைக்கின்றன.

கோழிகள் இயற்கையாக மேய்ந்து அதன் மூலம் பெரும் உணவில்தான் நமக்கு ஆரோக்கியம் தரும் நன்மைகள் நிறைந்த கோழி இறைச்சியும் முட்டைகளும் கிடைக்கும். இந்த நன்மைகள் எல்லாம் 30 வருடங்களுக்கு முன்பு வரை இயற்கையாக கிடைத்துக்கொண்டிருந்தன. பிராய்லர் கோழிகள் அதிகம் வந்தபின் அந்த முறை மாறியது. ஆனால், இன்றும் நாட்டுக்கோழிகளுக்கு தனி மதிப்பு இருக்கிறது. கிராமத்து வீடுகளில் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தனி விலையே இருக்கிறது.

தமிழகத்தில் காணப்படும் கோழி இனங்கள் பெரும்பாலும் முட்டைக்காகவோ இறைச்சிக்காகவோ வளர்க்கப்படுகின்றன. ஆனால், இந்த இரண்டு தேவைகளையும் போதுமான அளவில் பூர்த்தி செய்யும் கோழி இனம், கடக்நாத் கோழிகள். இவற்றின் முட்டையிலும் கறியிலும் அதிக அளவு புரதச் சத்தும் இரும்புச் சத்தும் உள்ளன.

இதன் உண்மையான பெயர் 'காலாமசி'. அந்தச் சொல்லுக்கு, கருப்புச் சதை கொண்ட கோழி என்று அர்த்தம். சுவையான, கருப்பு இறைச்சிக்காக இந்தக் கோழிகள் புகழ்பெற்றவை. இவற்றின் உடலில் மெலனின் அதிகமாகச் சுரப்பதால் கருப்பு நிறத்தில் இருக்கின்றன. இவற்றின் பூர்வீகம் மத்தியப் பிரதேசம் என்றாலும், தமிழகத்தில் இன்றைக்கு அதிக அளவில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளாக இவை இருக்கின்றன. இந்தக் கோழியின் தோல், அலகு, கால் விரல்கள், பாதம் போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கும். கொண்டை, நாக்கு போன்றவை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இவை, முட்டைகளை அடை காப்பதில்லை. எனவே வேறு கோழியினங்கள் மூலம் இவற்றின் முட்டைகளை அடைகாக்க வைக்கின்றனர். இந்தக் கோழிகள் ஆண்டுக்கு 80 முதல் 120 முட்டைகள்வரை இடும்.

தோல் மற்றும் வாத நோய்களுக்கு இந்தக் கோழியின் இறைச்சி நல்ல மருந்தாகப் பயன்படுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


Next Story