குளியல் அறை பளிச்சிட...!


குளியல் அறை பளிச்சிட...!
x
தினத்தந்தி 23 July 2023 10:00 PM IST (Updated: 23 July 2023 10:00 PM IST)
t-max-icont-min-icon

குளியல் அறை பளிச்சிட ஒரு நாளுக்கு ஒரு முறையேனும் சுத்தம் செய்ய வேண்டும்.

நட்சத்திர விடுதிகளில் பளிச்சிடும் குளியல் அறைகளைப் போன்று உங்கள் வீட்டிலும் வேண்டுமா? அதற்கு நீங்கள், கொஞ்சம் மெனக்கிட்டால் போதும். முதலில் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை குளியல் அறைகளைக் கழுவ வேண்டும் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும். அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது. தினமும் செய்தால் மிக நல்லது. கழிவறை கோப்பையை கடைகளில் கிடைக்கும் பல விதமான சுத்தம்செய்யும் திரவங்கள் கொண்டு சுத்தம் செய்யலாம். 15 அல்லது 20 நிமிடங்கள் ஊற விட்டுக் காம்பு நீண்ட தேய்ப்பான்களைக் கொண்டு சுத்தம் செய்யலாம்..

குளியல் தொட்டியை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னரும் சுத்தம் செய்ய வேண்டும். ஈரத்தன்மை நீடித்திருந்தால் பூஞ்சை ஏற்படும். குளியல் தொட்டியில் குளிப்பவர், அதன் மீது சாய வேண்டி இருக்கும். எனவே அதில், பூஞ்சை இருந்தால் நமக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகையால் மிதமான சுத்தம்செய்யும் திரவம் கொண்டு சுத்தம்செய்து பின் துணியால் ஈரமில்லாமல் துடைத்து விட வேண்டும். இதே முறையில் ஷவர் குழாய்களையும் சுத்தம் செய்யலாம்.

முகம், கை கழுவுதல், ஷேவிங், பல் துலக்குதல் என பல வகை பயன்பாட்டுக்கு, கை கழுவும் கோப்பைதான் நம் குளியல் அறைகளிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆதலால் அதனை எப்போதுமே கிருமிகள் அற்று சுத்தமாய் வைத்திருப்பது மிக மிக அவசியம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னும் அல்லது ஒரு நாளுக்கு ஒரு முறையேனும் சுத்தம் செய்ய வேண்டும்.

குளியல் அறைகளின் பெரும்பான்மை இடத்தை டைல்ஸ்கள் ஆக்கிரமித்துள்ளன. அழுக்கான, ெபாலிவு இழந்த டைல்ஸ்கள் குளியல் அறையின் அழகையே பாதித்து விடும். டைல்ஸ்கள் மீது தெறிக்கும் நீர் மற்றும் சோப் திவலைகளை எளிதில் அகற்றலாம். முக்கால் கப் பேக்கிங் சோடாவுடன் கால் கப் பிளீச் சேர்த்து பழைய பல் துலக்கும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்தால் எல்லா விதமான கறைகளும் நீங்கி டைல்ஸ்கள் பளிச்சிடும். இது போன்ற சுத்தப்படுத்தும் வேலைகள் செய்யும் போது கைகளுக்குப் பாதுகாப்பாக நீண்ட உறை அணிந்துகொள்ள வேண்டும்..

குளியல் அறைகளில் உள்ள குழாய்கள் மீதும் நாம் அக்கறை காட்ட வேண்டும். கடுமையான சுத்தம்செய்யும் திரவம் கொண்டு சுத்தம் செய்தால் குழாய்களின் மெட்டல் கோட்டிங் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆகையால் அரை கப் பேக்கிங் சோடா மற்றும் அரை கப் வொயிட் வினிகர் கலந்த கலவையால் சுத்தம் செய்யலாம். கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க மாதம் ஒருமுறை வெந்நீர் ஊற்றி விட வேண்டும்.


Next Story