உலகின் மிக நீளமான ஆறுகள்


உலகின் மிக நீளமான ஆறுகள்
x

உலகின் மிக நீளமான ஆறுகளில் முதன்மையானது. அதாவது 6650 கி.மீ. நீளம் கொண்ட மிக நீளமான ஆறு நைல் நதி ஆகும்.

ஆறுகள் என்பது இயற்கையாக உருவான ஒரு நீரோடை ஆகும். பொதுவாக ஆறுகள் மலைப் பிரதேசங்களில் இருந்து உருவாகிறது. குளிர் பிரதேசங்களில் காணப்படும் மலைப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவதால், தண்ணீரானது தாழ்வான பகுதிகளை நோக்கி செல்கிறது.

அதேபோல், தட்பவெப்பநிலை கொண்ட மலைப்பகுதிகளில் அதிக அளவு மழை பெய்து, அந்த நீரும் தாழ்வான பகுதி வழியாக சென்று கடலில் கலக்கின்றன. அவ்வாறு மலைக்கும், கடலுக்கும் இடைப்பட்ட நீர் செல்லும் வழித்தடத்தையே நாம் ஆறுகள் என்று அழைக்கிறோம். இவை இயற்கையாகவே உருவாகியுள்ளது.

இவற்றில் இருந்து செயற்கை ஆறுகளை உருவாக்கி பல பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்வதும் உண்டு. இவை துணை ஆறுகள், கால்வாய்கள் என அழைக்கப்படுகின்றன. ஆறுகள் பொதுவாக தூய்மையான நீர் நிறைந்த பகுதியாகவே உள்ளது. ஆதிகாலம் முதலே ஆற்றுக்கரையில் மனிதனின் நாகரீகம் வளர்ந்துள்ளது.

நைல் நதி, அமேசான் ஆறு

ஆறுகளில் மிகப்பெரிய நீரோடை கொண்ட ஆறு நைல் நதி ஆகும். இது மிகப்பெரிய ஆற்று படுகையையும் கொண்டது. உலகின் மிக நீளமான ஆறுகளில் முதன்மையானது. அதாவது 6650 கி.மீ. நீளம் (4132 மைல்) கொண்ட மிக நீளமான ஆறு நைல் நதி ஆகும். இது ஆப்ரிக்காவின் வட கிழக்கு பகுதியில் உள்ளது. நைல் நதியானது வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இரண்டு துணை ஆறுகளை கொண்டுள்ளது. எகிப்து நாட்டின் பண்டைய கால குடி ஏற்றங்கள் நைல் நதிக்கரையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் ஆறு அமேசான் காடுகள் வழியாக பாய்கின்றன. உலகின் 2-வது மிக நீளமான ஆறு ஆகும். இது தென் அமெரிக்காவில் உள்ளது. 6400 கி.மீ. நீளம் கொண்ட மிகப்பெரிய ஆறு ஆகும். பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஆற்று படுகை கொண்டது. உலகின் மிகப்பெரிய ஆறு என்ற சிறப்பு இதற்கு இருந்தாலும் நீளத்தில் நைல் நதியே மிக பெரியதாக உள்ளது. இது மழைக்காடுகள் நதி என்று அழைக்கப்படுகிறது. உலகின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. அனகோண்டா வகை பாம்புகள் மற்றும் டால்பின் வகை மீன் இனங்கள் உள்ளிட்ட பல்வேறு அரியவகை உயிரினங்கள் இந்த ஆற்றில் வசிக்கின்றன. உலகிலுள்ள உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்கு வாழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.

யாங்சி ஆறு

யாங்சி ஆறுகள் உலகின் மூன்றாவது பெரிய ஆறு ஆகும். இது சீனாவில் உள்ள மிகப்பெரிய ஆறு. 6,300 கி.மீ. நீளம் கொண்டது. சீன நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை வளப்படுத்துகிறது. இந்த ஆற்றுப் பகுதியில் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக அங்கு வசிக்கும் சீன முதலை, துடுப்பு மீன், கடல் பன்றி போன்ற இனங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 5170 மீ உயரமாக உள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள ஆறுகளில் மிக நீளமான ஆறு இதுவாகும்.

மிசிசிப்பி ஆறு, யெனீசீ ஆறு

இது 6,275 கி.மீ. கொண்ட உலகின் நான்காவது பெரிய ஆறு ஆகும். இது வட அமெரிக்காவில் உள்ள நீண்ட பெரிய ஆறாகும். பல வளைவுகள் கொண்டதாக உள்ளது. மிசிசிப்பி என்ற பெயர் இதில் மிசி என்பதற்கு விசாலம், சிப்பி என்பதற்கு தண்ணீர் என்று பொருள். இந்திய வார்த்தைகளின் அடிப்படையில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளை வளப்படுத்துகிறது. இங்கு உயிரியல் பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.

யெனீசீ ஆறு, உலகின் ஐந்தாவது மிகப்பெரிய ஆறு ஆகும். 5549 கி.மீ. நீளம் கொண்ட ஆற்றுப்படுகை உடையது. பைகால் ஏரியில் இருந்து யெனீசீ ஆறு உற்பத்தி ஆகிறது. 55 வகையான மீன்களுக்கு இருப்பிடமாக உள்ளது.


Next Story