மாற்று கூரை
கட்டுமானத் துறையில் அறிமுகமாகியுள்ள மாற்றுப் பொருள்தான் பாலி கார்பனேட். திறந்தவெளி கூரை அமைக்க இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
இதன் எடை தாங்கும் திறன் மிக அதிகம். எளிதாக கையாளக்கூடிய அளவில் இதன் எடையும் குறைவு. இதனால் இதைப் பிரிப்பது எளிது. ஓரிடத்திலிருந்து பிரித்து வேறோர் இடத்தில் பொருத்தி எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் இது இருக்கிறது.
எடை குறைவாக இருப்பதால் கட்டுமானத்தின் உறுதி குறையும் என நினைக்க வேண்டாம். கட்டுமானத்தின் உறுதி ஸ்டீல் கூரைக் கட்டுமானத்தைவிடவும் அதிகமாக இருக்கும். பிறகு ஸ்டீல் கூரைகளைப் பயன்படுத்தும்போது அவை துருப்பிடிக்கும், தேய்மானமும் அடையும். ஆனால் இந்த மாற்றுப் பொருளில் அந்தக் கவலை இல்லை. இவை துருப்பிடிக்கும் தன்மை அற்றவை. கூரைக் கட்டுமானங்கள் மட்டுமின்றி கதவுகள், அலமாரிகள் போன்றவற்றின் கைப்பிடிகளையும் இதைக் கொண்டு தயாரிக்க முடியும். எடை குறைவாகவும், கையாள எளிதாகவும் இருக்கும். வெப்பம் அதிகமாகத் தாக்கும் வாய்ப்புள்ள கட்டிடப் பகுதிகளில் இந்த பாலி கார்பனேட் பொருள்களைப் பயன்படுத்தலாம். இது அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியது என்பதால் விபத்துகளை தவிர்க்கலாம். பாலி கார்பனேட் 200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கக் கூடியது. சிலிகான் பாலி கார்பனேட், கண்ணாடி, நைலான் ஆகியவற்றைக் கலந்து பாலி கார்பனேட்டை தாயாரிக்கிறார்கள். பாலியெஸ்டர், பாலி அமைட் ஆகிய வேதிப்பொருள்களும் இதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்தக் கலவையை விருப்பதுக்கேற்ப உருவாக்க குறைந்த நேரமே ஆகும். அதனால் உற்பத்திச் செலவு குறைவாகத்தான் இருக்கும். மேலும் இந்தப் பொருள்கள் இன்றைக்கு சென்னையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால் வாங்குவதும் மிக எளிது. கண்ணாடி, பிளாஸ்டிக், ஜிப்சம், பைபர் போன்ற பொருட்களுக்கு பாலிகார்பனேட் சிறந்த மாற்றுப் பொருளாகும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தப் பொருள் கட்டுமானத் துறையில் செல்வாக்கு செலுத்தும் எனக் கட்டிடக் கலை நிபுணர்கள் கருதுகிறார்கள்.