உடல் ஆரோக்கியத்துக்கு யோகா பயிற்சி
நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மனநலத்தையும் பெற்று கொள்ள பயன்படும் கலையே யோகா ஆகும். யோகா எனப்படுவது ஒரு கலை, ஒரு அறிவியல் மற்றும் வாழ்க்கை முறையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.
நாம் வயது முதிரும் பொழுது நம் உடல் உறுப்புகளின் இயக்கங்கள் யாவும் சிறிது, சிறிதாக குறைந்து கொண்டே வந்து இறுதியில் சீர்கேடு அடைகின்றன. வயது முதிர்வதை நம்மால் ஒரு போதும் தவிர்க்க முடியாது. ஆனால் யோகா பயிற்சியை மேற்கொள்வதால் முதுமையில் ஏற்படக்கூடிய உடல் தளர்ச்சி தடுக்கிறது.
நாம் ஒழுங்காக முறையோடு யோகா பயிற்சியை மேற்கொள்ளும் போது நம்முடைய உடல் சக்தி மற்றும் மனோ சக்தியை சிறிதும் இழக்காமலே நம்மால் முதுமையிலும் வாழ முடியும்.
யோகாவினால் ஏற்படும் விளைவுகள் ஏனைய விளையாட்டுகளின் மூலமாகவும், உடற் பயிற்சியின் மூலமாகவும் ஏற்படும் விளைவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
ஏனைய பிற விளையாட்டுகள் நம் உடல் தசைகள் வலிமை பெறுவதற்கு மட்டுமே பயன்பெறுகின்றன. ஆனால் யோகா சமயத்திற்கேற்ப வளைந்து கொடுக்கக் கூடிய ஆரோக்கியம் உள்ள உடலை உருவாக்குகிறது. யோகா பயிற்சி உடலில் சக்தியை சேமிக்கிறது. யோகாவில் பயிலும் அநேக ஆசனங்கள் நமது உள்ளுறுப்புகள் செவ்வனே செயல்புரிவதற்கு பயன்படுகின்றன. அவை தசைகள் வலுப்பெறவும், எலும்புகள் உறுதியாக இருக்கவும் உதவுகின்றன. இதயம் வலுவடையவும், உடலினுள் பாயும் ரத்த ஓட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் உதவி செய்கிறது.
உடல் அழகை கெடுக்கும் தொப்பையை குறைக்கிறது. உடலில் உள்ள சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. மூளைக்கு அதிக அளவில் ஆக்சிஜன் செல்வதற்கு பயன்படுகிறது. இதன் மூலம் மனம் விழிப்புணர்வு பெறுகிறது. உணர்ச்சிகள் சமநிலைப்படுத்தப்படுகிறது. உடலின் எல்லா பகுதிகளுக்கும் போதுமான ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது.
யோகா பயிற்சி செய்வதற்கு சில விதிமுறைகள்:-
யோகா பயிற்சி செய்வதற்கு முன்பாக இளஞ் சூடான நீரில் குளிக்கக்கூடாது. சுத்தமான தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும். பயிற்சி செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. அப்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். உடலின் கழிவுகளை அகற்றிய பிறகே பயிற்சி செய்ய வேண்டும். வயிறு புடைக்க உண்ட பிறகு இந்த பயிற்சிகளை செய்யக் கூடாது.
யோகா பயிற்சிகளை வெறும் தரையில் தான் செய்ய வேண்டும். கட்டில் மீது அமர்ந்து செய்யக் கூடாது. பயிற்சி செய்யும் இடம் காற்றோட்ட வசதி உள்ளதாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும்.
பெண்கள் தலைமூடி நீளமாக இருப்பின் அதை மடித்து கட்டிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் முறையாக பயிற்சி செய்ய வேண்டும். இந்த ஒழுங்குமுறை இல்லாவிட்டால் நாம் ஒரு போதும் வெற்றி பெறமுடியாது. யோகா பயிற்சிகளை முறைப்படி கற்றுக்கொண்டு நம் உடல் ஆரோக்கியத்தை பேணுவோம்.