புலிகளை ரசிக்க வைக்கும் தேசியப் பூங்காக்கள்


புலிகளை ரசிக்க வைக்கும் தேசியப் பூங்காக்கள்
x

வசீகரிக்கும் வன நிலப்பரப்புகள் சூழ்ந்திருக்கும் சில தேசிய பூங்காக்கள் உங்கள் பார்வைக்கு....

நாடு முழுவதும் புலிகள் காப்பகங்கள் பரந்து விரிந்துள்ள நிலையில் அங்கு புலிகள் உலவுவதை ஓரளவுக்கு அருகில் இருந்து ரசிக்கக்கூடிய தேசியப்பூங்காக்கள் சில உள்ளன. அங்கு புலிகளை மட்டுமின்றி இயற்கையோடு இணைந்து வாழும் பல்வேறு உயிரினங்களை பார்க்க முடியும். அங்கு நிலவும் இயற்கை சூழல் மனதை ரம்மியமாக்கும்.

பெஞ்ச் தேசியப் பூங்கா

மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் எல்லையில் அமைந்துள்ள இந்த தேசியப் பூங்காவின் மாறுபட்ட நிலப்பரப்பு புலிகள் மற்றும் பிற வனவிலங்குகள் வசிப்பதற்கு உகந்த இடமாக விளங்குகிறது. 'தி ஜங்கிள் புக்' படத்தை நினைவூட்டும் விதமாக இயற்கை வனப்புடன் அழகுற காட்சி அளிக்கிறது. இங்கு நடைபெறும் பயண சபாரியும் இயற்கை பிரியர்களை குஷிப்படுத்தும்.

பன்னா தேசிய பூங்கா

மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த வன தேசிய பூங்கா, வனவிலங்குகள் வசிப்பதற்கேற்ற தனித்துவமான சூழலை கொண்டிருக்கிறது. பூங்காவின் அழகிய நிலப்பரப்புகள், அடர்ந்த காடுகள் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கின்றன. அத்துடன் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் விலங்கினங்களும் இங்கு உள்ளன. வரலாற்று தளங்களும் இங்கு ஒருங்கே அமையப்பெற்றுள்ளது. அதனால் சுற்றுலாவுடன் வரலாற்று தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

பாந்தவ்கர் தேசியப் பூங்கா

மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள இதுவும் புலிகள் உலவுவதற்கு ஏற்ற அதிக அடர்த்தியைக் கொண்டுள்ளது. அதனால் இங்கும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புலிகளை கண்டுகளிக்க பயண சபாரியும் நடைபெறுகிறது. அத்துடன் மலைப்பாங்கான நிலப்பரப்பு, பழங்கால கட்டுமானங்கள், அடர்ந்த தாவரங்கள் ஆகியவை இயற்கைக்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கின்றன.

கன்ஹா தேசியப் பூங்கா

மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த தேசியப் பூங்காவுக்கு ஏராளமான ஓக் காடுகள், பரந்து விரிந்த புல்வெளிகள் அழகு சேர்க்கின்றன. அத்துடன் பூங்காவில் நிலவும் சுற்றுச்சூழல் அமைப்புகள் புலிகள் மற்றும் பல்வேறு விலங்குகளுக்கு சிறந்த வாழ்விடத்தை கொண்டுள்ளன. அதனால் அங்கு ஏராளமான வன விலங்குகள் சுதந்திரமாக உலவுகின்றன. புலி ஆர்வலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு சிறந்த இடமாக இது அமைந்திருக்கிறது.

தடோபா தேசியப் பூங்கா

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த தேசியப் பூங்கா, புலிகளை நெருங்கிச் சென்று சந்திக்க விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு புகலிடமாக உள்ளது.

அதன் மாறுபட்ட நிலப்பரப்புகள், ஏரிகள், புல்வெளிகள், அடர்ந்த காடுகள் புலிகளின் எண்ணிக்கையை பெருகச்செய்யும் வாழ்விடத்தை கொண்டிருக்கின்றன.


Next Story