2025ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய தேர்தல்கள் - ஒரு பார்வை


2025ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய தேர்தல்கள் - ஒரு பார்வை
x

2025ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய தேர்தல்கள் குறித்து இங்கு காண்போம்.

டெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 145 கோடி மக்கள்தொகையை கொண்டுள்ள இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மிகப்பெரிய அளவில் திருவிழா போன்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2025ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மற்றும் அதன் முடிவுகள் குறித்த விவரத்தை இங்கு காண்போம்.

டெல்லி சட்டசபை தேர்தல்:

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 10ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பாஜக வெற்றி:

பெரும்பான்மைக்கு 36 தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய நிலையில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப்பின் டெல்லியில் ஆட்சியை பாஜக கைப்பற்றியது. பாஜகவின் ரேகா குப்தா டெல்லி முதல் மந்திரியாக பிப்ரவரி 20ம் தேதி பதவியேற்றார். 22 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய ஆம் ஆத்மி தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது.

பீகார் சட்டசபை தேர்தல்:

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ம் தேதியும், 2ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் , பிற கட்சிகள் இடம்பெற்றன. இந்தியா கூடணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.

பாஜக கூட்டணி வெற்றி

தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டன. இதில், தேசிய ஜனநாய கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில் பாஜக 89 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளையும் கைப்பற்றின. கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் 28 தொகுதிகளையும் கைப்பற்றின. இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. பிற கட்சிகள், சுயேட்சைகள் 6 தொகுதிகளை கைப்பற்றின. இதனை தொடர்ந்து பீகாரின் முதல்-மந்திரியாக 10வது முறையாக நிதிஷ் குமார் நவம்பர் 20ம் தேதி பதவியேற்றார்.

மாநிலங்களவை தேர்தல்:

நாடாளுமன்றம் என்பது மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகளை கொண்டது. மக்களவையில் 545 இடங்களும், மாநிலங்களவையில் 250 இடங்களும் உள்ளன. இதில், மக்களவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும், மாநிலங்களவையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள்.

அதேவேளை, மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தப்பின் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மாநிலங்களவையில் 14 உறுப்பினர்களின் பதவிகாலம் நிறைவடைந்ததையடுத்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. ஜுன் 19ம் தேதி முதல் அக்டோபர் 24ம் தேதி வரை மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 14 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, பாஜக 3, அதிமுக 2 , அசோம் ஞான பரிஷத் கட்சியில் 1 என மொத்தம் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதேவேளை, இந்தியா கூட்டணியில் 7 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, திமுக 3 , தேசிய மாநாட்டு கட்சி 3, மக்கள் நீதி மய்யம் 1 என மொத்தம் 7 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேவேளை, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 1 மாநிலங்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணை ஜனாதிபதி தேர்தல்

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார். நாட்டின் 2-வது மிக உயர்ந்த அரசமைப்பு பதவியான துணை ஜனாதிபதி பதவியை நீண்ட நாட்களுக்கு காலியாக வைத்திருக்கக் கூடாது என்று சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த சி. பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். துணை ஜனாதிபதியை நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள்.

பாஜக வெற்றி:

அதன்படி, துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 781 வாக்குகளில் 767 வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் அன்று மாலை எண்ணப்பட்டன. இதில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. எஞ்சிய 752 வாக்குகளில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று அபார வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இதையடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இதனை தொடர்ந்து நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக கடந்த மாதம் 12ம் தேதி சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.

1 More update

Next Story