மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கர்நாடக அரசுக்கு ஆலோசனை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து,தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள்,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது அணைகட்டும் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில்,சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாவது:
"மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசால் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.மேலும்,மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும்,காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது . இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.