அயோத்தியில் அனுமன் ராஜ்ஜியம்
அனுமன் கோட்டைக்கு செல்பவர்கள் அங்குள்ள கடைகளில் லட்டு பிரசாதத்தை வாங்கி கோவிலில் உள்ள அனுமனுக்கு கொண்டு போய் கொடுப்பார்கள்.
அயோத்தி நகரை ராம ராஜ்ஜியம் என்று சொன்னாலும் கூட, அங்கு கடவுள் அனுமனுக்கு தான் எப்போதும் முதல் மரியாதை. அயோத்தி ராமரை வழிபடுவதற்கு முன்பு அனைவரும் ஸ்ரீ அனுமன் கர்கி மந்திர் என்று அழைக்கப்படும் அனுமன் கோட்டைக்கு சென்று அனுமரை வழிபட வேண்டும். இந்த அனுமன் கோட்டை 76 படிக்கட்டுகளை கொண்டது. இந்த கோவிலில் அனுமனின் தாயார் அஞ்சனையும், மடியில் இளம் அனுமனும் வீற்றிருக்கின்றனர். ராவணனை வென்று ராமர் அயோத்தி திரும்பியபோது, அனுமன் இங்கு தான் வசித்தார் என்ற அடிப்படையில் இந்த அனுமன் கோவில் கடந்த 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பொதுவாக கோவில்களுக்கு சென்றால் அங்கு பக்தர்களுக்கு பிரசாதம் தருவார்கள். ஆனால் அனுமன் கோட்டைக்கு செல்பவர்கள் அங்குள்ள கடைகளில் லட்டு பிரசாதத்தை வாங்கி கோவிலில் உள்ள அனுமனுக்கு கொண்டு போய் கொடுப்பார்கள்.
அயோத்தியை பொறுத்தவரை அதிகளவில் குரங்குகள் இருக்கின்றன. இந்த குரங்குகளால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. இருப்பினும் அயோத்தி மக்கள் குரங்குகளை, அனுமன் வடிவில் பார்ப்பதால் அதனை விரட்டுவது இல்லை. மாறாக அயோத்தியை காக்கும் கடவுள் என்று அதனை வணங்குகின்றனர்.
கடந்த 1998-ம் ஆண்டு கூட அயோத்தி அனுமன் கோவிலில் ஒரு வெடிகுண்டு வைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த ஒரு குரங்கு வெடிகுண்டு வயரை கடித்து கீழே துப்பி விட்டது. அந்த வெடிகுண்டை கண்டுபிடிக்க உதவியதும், நகர மக்களை காப்பாற்றியதும் குரங்கு வடிவில் வந்த அனுமன்தான் என்று அயோத்தி மக்கள் நம்புகிறார்கள்.