ராமர் கோவில் கும்பாபிஷேகம்; விஐபிகளுக்கு பிரத்யேக அழைப்பிதழ்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?


ராமர் கோவில் கும்பாபிஷேகம்; விஐபிகளுக்கு பிரத்யேக அழைப்பிதழ்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
x

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது பாரம்பரிய நாகரா பாணியில் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில், பால பருவ ராமரின் சிலை வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட இருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் போல, கும்பாபிஷேக விழா அழைப்பிதழும் பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த அழைப்பிதழ் 5 பிரிவுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரதான அழைப்பிதழில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது என்றும், இந்த விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச கவர்னர் ஆனந்தி பென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு சிறப்பு விருந்தினர்கள் வருவதாகவும், 11.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும் என்றும், பகல் 12.30 மணிக்கு சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றுகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு காலை 11 மணிக்கே தங்கள் இருக்கைக்கு வந்துவிட வேண்டும், செல்போன், கேமரா, காலணி பாதுகாப்பு மைய வசதி, சிற்றுண்டி ஏற்பாடு, அழைப்பிதழுடன் ஆதார் அட்டை (ஒரிஜினல்) இருக்கவேண்டும், அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட நபர் தவிர, மாற்று நபர் அனுமதி இல்லை என்ற விவரங்களும் அழைப்பிதழில் உள்ளன. 2-வது பிரிவு அழைப்பிதழில் பால பருவ ராமரின் உருவப்படம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. தாமரை பூவில் நின்றபடி, அரச உடையில் வில் அம்பு ஏந்தி இருக்கும் இந்த படம் ஈர்க்கும்படியாக இருக்கிறது.

மேலும், அதில் 'கும்பாபிஷேக விழாவுக்கு அயோத்தி உங்களை அழைக்கிறது. இது மிகவும் அரிதான, வாழ்நாளில் காண முடியாத நிகழ்வு ஆகும்' என்ற வார்த்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன் கடைசி பக்கத்தில் அயோத்தி ராமர் கோவில் கடந்து வந்த பாதை பற்றி கூறப்பட்டிருக்கிறது.

3-வது பிரிவில் ஒரு கையேடு இருக்கிறது. இந்த கையேட்டில் தேவரஹா பாபாஜி மகராஜ், பாபா அபிராம்தாஸ் மகராஜ், பரம்ஹன்ஸ் ராமச்சந்திரதாஸ் மகராஜ், கே.கே.நாயர், தாக்கூர் குருதத் சிங், கோபால் சிங் விஷாரத், தவு தயாள் கண்ணா, மஹந்த் அவைத்தியநாத் மஹராஜ், ஓம்கார் பாவே, தேவ்கிநந்தன் அகர்வால், ஷிவராமச்சாரியா மகராஜ், ஷாந்தானந்த் சரஸ்வதி மகராஜ், விஷ்வேஸ் தீர்த் மகராஜ், விஷ்ணுஹரி டால்மியா, வம்தேவ் மகராஜ், சத்யமித்ரானந்த் கிரி மகராஜ், பாலா சாகேப் தியோரஸ், மோரோபந்த் பிங்கலே, ராஜேந்திர சிங் ராஜூ பையா, அசோக் சிங்கால் உள்ளிட்ட ராமர் கோவில் இயக்கத்தில் ஈடுபட்டோரின் புகைப்படங்களும், அவர்களை பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன.

4-வது பிரிவு அழைப்பிதழில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் வேண்டுகோள் கடிதம் உள்ளது. அதில், வருகிற 22-ந்தேதி பகல் 12.20 மணிக்கு பிரதிஷ்டை நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களின் அருகே பக்தர்களை அழைத்து 'ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி பஜனை செய்யவேண்டும் என்றும், பிரதிஷ்டை வைபவத்தை டி.வி. அல்லது எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப்பி பக்தர்களை காண செய்யவேண்டும் என்றும், அன்றைய தினம் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு வீடுகளில் தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ராமர் கோவிலின் நீள, அகல உள்ளிட்ட சகல விவரங்களும் புள்ளி விவரங்களாக குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. இவை அந்தந்த மாநில மொழிகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

5-வதாக அட்சதை பிரசாதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. ராமர் கோவில் பிரதிஷ்டையின் போது அட்சதை தூவி வழிபட முன்கூட்டியே சிறிய பாக்கெட்களில் அட்சதையும், அழைப்பிதழுடன் அனுப்பப்பட்டு இருக்கிறது.அந்த பாக்கெட்டின் முகப்பில் அயோத்தி ராமர் கோவிலின் புகைப்படமும், பின்புறம் பட்டாபிஷேக ராமரின் புகைப்படமும் அச்சிடப்பட்டு இருக்கிறது. இது பெரிதும் கவனம் ஈர்க்கும்படி அமைந்துள்ளது. இந்த அழைப்பிதழ் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் அச்சிடப்பட்டு இருக்கிறது. விழா அழைப்பிதழே, ராமர் கோவில் கும்பாபிஷேகம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம்.

ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் சினிமா, விளையாட்டு, ஊடகம், சாதுக்கள், வேத விற்பன்னர்கள், நீதிபதிகள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 7 ஆயிரம் பேருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story