36. குறைந்த சம்பளத்தில் நடித்த ஜெமினிகணேசன்


36. குறைந்த சம்பளத்தில் நடித்த ஜெமினிகணேசன்
x
தினத்தந்தி 17 March 2017 10:30 PM GMT (Updated: 17 March 2017 12:19 PM GMT)

இந்தியில் ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தை தயாரிப்பது தொடர்பாக மும்பை சென்றிருந்தேன்.

ந்தியில் ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தை தயாரிப்பது தொடர்பாக மும்பை சென்றிருந்தேன். அப்போது ஒரு நாள் அங்கிருந்த எங்கள் அலுவலக கிளை மேனேஜர் சின்னான் மேனனுடன் காரில் போய்க் கொண்டிருந்தேன். வழியில் ஒரு தியேட்டர் தென்பட்டது. அதன் முன்பு இருந்த பேனர் என்னைக் கவர்ந்தது. நடிகர் கிஷோர்குமாரும், அவருடன் ஒரு பையனும் இருப்பது போன்ற பேனர் அது.

சின்னான் மேனனிடம், ‘இது என்ன படம்?’ என்று கேட்டேன்.

‘இது வேணாம் சார். படம் சுமாராத்தான் போவுது’ என்றார். அந்தப் படம் ‘தூர் ககன்கி சாவோன் மே’.

எனக்கென்னவோ அந்தப் பேனரைப் பார்த்ததும், ஒரு வித்தியாசமான கதை அந்தப் படத்தில் இருப்பதாகப் பட்டது.

பிறகு ஒரு நாள், எனக்கு கார் ஓட்டிக்கொண்டு வந்த யஷ்வந்த் என்ற மராட்டிய டிரைவரிடம் அந்தப் படம் பற்றிக் கேட்டேன்.

‘இது ஒரு மூங்கா கதை. அது மட்டும்தான் தெரியும். படம் எப்படிப் போவுதுன்னுல்லாம் தெரியாது’ என்றார். ‘மூங்கா’ என்றால் ‘ஊமை’ என்று அர்த்தம்.

அந்தப் படத்தின் பிரிண்ட்டை வாங்க வேண்டும் என்று சின்னான் மேனனிடம் சொன்னேன். ஆனால் அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கிடையில் அந்தக் கதையை வீனஸ் பிக்சர்ஸ் மேனேஜர் சுப்பிரமணியம் வாங்கிவிட்டதாக தகவல் கிடைத்தது.

நான் அந்தக் கதையை வாங்க ஆசைப்பட்டேன் என்ற விவரம் தெரிந்து, வீனஸ் மேனேஜர் சுப்பிரமணியம் என்னைப் பார்க்க வந்தார்.

‘சார்.. பத்தாயிரம் ரூபாய் கொடுத்து இதை வாங்கினேன். ஆனால் படம் பார்த்தவர்கள், இந்தக் கதையை எம்.ஜி.ஆரை வைத்து எடுத்தாலும் ஓடாது என்று கூறுகிறார்கள். மேலே ஐந்தாயிரம் போட்டு பதினைந்தாயிரமாக கொடுத்தால், இந்தக் கதையை உங்களுக்கே தந்து விடுகிறேன்’ என்றார்.

நான், என் சகோதரர்கள் முருகன், குமரன், அப்பச்சி, கிருஷ்ணன்–பஞ்சு, ஜாவர் சீதாராமன், ஏ.சி.திருலோகசந்தர் எல்லோரும் அந்தப் படத்தைப் பார்த்தோம்.

கிருஷ்ணனும், பஞ்சுவும் ‘சுத்த வேஸ்ட்’ என்று கருத்து சொன்னார்கள்.

‘ஒரு குழந்தை சினிமாவுல அதிகமாக பேசுனாதான், அந்தக் கேரக்டர் எடுபடும். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் வெற்றிக்கும் அதுதான் காரணம். ஆனால் இதில் ஊமை பையனா காட்டினா எப்படி எடுபடும்?’ என்றார் ஜாவர் சீதாராமன்.

எனக்கொரு ஐடியா தோன்றியது. அதை ஜாவரிடம் கூறினேன். ‘பேசிக்கொண்டிருந்த பையன் எப்படி ஊமையானான் என்பதை, ஒரு முன் கதையாக வைத்தால் எப்படி இருக்கும்?’.

உடனே ஜாவர், ‘அடடே, அற்புதமான ஐடியா.. எனக்கு இது தோன்றவில்லையே’ என்று பாராட்டினார்.

இதையடுத்து அந்தக் கதையை வாங்கி திருலோகசந்தரை இயக்க வைத்தோம். நான் சொன்னதை வைத்து அற்புதமான திரைக்கதையை எழுதினார் ஜாவர். என்னுடைய சகே£தரர் குமரனும், ஜாவருடன் சேர்ந்து திரைக்கதை சிறப்பாக உருவாவதில் பெரும் பங்கு வகித்தார்.

படத்திற்கு ‘ராமு’ என்ற பெயர் முடிவானது. ராமு என்ற பெயரை பெரியதாகப் போட்டு, ‘ஒரு சின்னஞ்சிறு உள்ளத்தின் சோகக் கதை’ என்று விளம்பரம் செய்தோம்.



இந்தப் படத்தில் ஜெமினிகணேசன் விரும்பி வந்து நடித்தார். ‘ராமு’ படத்தை நாங்கள் தயாரிப்பதற்குச் சில மாதங்கள் முன்பு, என்னைச் சந்தித்த ஜெமினிகணேசன், ‘இப்போல்லாம் ஏன் என்னை உங்க படங்கள்ல போடமாட்டேங்கிறீங்க?’ என்று உரிமையாகக் கேட்டார்.

‘நீங்க களத்தூர் கண்ணம்மா படத்தின் போதே தொண்ணூறாயிரம் சம்பளம் கேட்டு, பேரம் பேசி எழுபத்தையாயிரம் வாங்கின ஆர்ட்டிஸ்ட். ஆனால் நாங்க ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் ஜெய் சங்கருக்கு 12 ஆயிரமும், ‘அதே கண்கள்’ படத்தில் ரவிச்சந்திரனுக்கு 10 ஆயிரமும்தான் கொடுத்தோம். உங்க சம்பளம் எங்களுக்குக் கட்டுப்படியாகாது’ என்றேன்.

அதற்கு ஜெமினி, ‘நீங்க உங்க ஹீரோக்களுக்கு என்ன தர்றீங்களோ, அதையே எனக்கும் கொடுங்க. நான் நடிக்கிறேன்’ என்றார்.

இந்தப் படத்தில் ஜெமினிகணேசன், தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, தன் மகன் ஊமை என்று தெரியவந்ததும், அப்படியே ஸ்தம்பித்துப் போய் சிலை மாதிரி நின்று ஒரு ரியாக்‌ஷன் தர வேண்டும் என்று இயக்குனர் திருலோகசந்தர் சொன்னதை, மிகச்சரியாக உள்வாங்கி அவர் நடித்த காட்சி மிகவும் அற்புதமாக அமைந்தது. வாய் பேச முடியாத சிறுவனாக மாஸ்டர் ராஜ்குமார் என்ற பையன் நடித்தான்.

‘அன்பே வா’ படம் டிசம்பர் மாதம் குளு குளு சிம்லாவில் எடுக்கப்பட்டது. ‘ராமு’ படமோ அதற்கு நேரெதிர். காடுவெட்டி நகர் என்ற இடத்தில் மொட்டைப் பாறையில் வியர்க்க விறுவிறுக்க படப்பிடிப்பை நடத்தினோம். 10.6.1966–ல் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த இடத்தில் ஜெமினியைப் பற்றி ஒருவி‌ஷயம் என் நினைவுக்கு வருகிறது. ‘மிஸ்ஸியம்மா’ படத்தை விஜயா புரடக்‌ஷன் எடுத்தது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படம். அதை இந்தியில் எடுக்க முடிவு செய்தோம். கிஷோர்குமாரை கதாநாயகனாக போடலாம் என்று நினைத்தோம். ஆனால் அங்கிருப்பவர்கள், தமிழில் ஜெமினி நடித்த கதாபாத்திரத்தை தாங்கி நடிப்பதற்கு கிஷோர்குமார் மட்டுமல்ல, இந்தியிலேயே ஆள் இல்லை என்று கூறிவிட்டனர். இதையடுத்து இந்தியிலும் ஜெமினியையே கதாநாயகனாக வைத்து அந்தப் படத்தை எடுத்தோம். எல்.வி.பிரசாத் படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் பெயர் ‘மிஸ் மேரி’.

‘ராமு’ படத்தை என்.டி.ராமாராவைக் கொண்டு, தெலுங்கில் எடுத்தோம். தனக்கென சில வித்தியாசமான கொள்கைகளைக் கொண்டிருந்த நடிகர் அவர். ‘ராமு’ தெலுங்கு படத்தில் அவரை ஒப்பந்தம் செய்வது தொடர்பாக சந்தித்து பேச நேரம் கேட்டிருந்தோம்.

ஒரு தேதி கொடுத்து, காலை 4.30 மணிக்கு வரச்சொல்லியிருந்தார். அவ்வளவு அதிகாலையில் அப்பாயின்ட்மெண்ட் என்பதே வித்தியாசமாக இருந்தது.

நாங்கள் சென்றபோது, அந்த அதிகாலையிலும்கூட காலைக்கடன்களை முடித்து, கச்சிதமாக மேக்கப் போட்டு தயாராக இருந்தார்.

எங்களிடம், ‘என் சம்பளம் எவ்வளவு தெரியுமா?’ என்று கேட்டவர், தொடர்ந்து ‘ஒரு லட்சம் வாங்குகிறேன். ஆனால் சமீபத்தில் என்னுடைய இரண்டு படங்கள் சரியாகப் போகவில்லை. எனவே பத்தாயிரம் குறைத்துக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு தொண்ணூறாயிரம் ரூபாய் தர வேண்டும்’ என்றார்.

இந்த காலத்தில் ஒருபடம் ஓடினாலே, அடுத்த படத்துக்கு தன் சம்பளத்தை பல லட்சம் ஏற்றிவிடும் ஹீரோக்களுக்கு மத்தியில், சில படங்கள் தோல்வி அடைந்ததால், சம்பளத்தைக் குறைத்துக் கொடுங்கள் என்று என்.டி.ஆர். கூறியது எங்களுக்கு வியப்பாகவே இருந்தது. ஒளிவு, மறைவு, சூது, வாது தெரியாத நடிகர் அவர்.

‘40 நாட்கள்தான் கால்ஷீட் தருவேன். அதற்குள் முடித்துக் கொள்ள வேண்டியது உங்கள் சாமர்த்தியம்’ என்று நிபந்தனை போட்டார். ஆனால் நாங்கள் அவர் தொடர்பான காட்சிகளையெல்லாம் 27 நாட்களிலேயே எடுத்து விட்டோம். அதில் அவருக்கு மிகவும் திருப்தி. ‘ராமு’ தமிழ்படம் எடுத்த, காடுவெட்டி நகரிலேயே தெலுங்கு படப்பிடிப்பும் நடைபெற்றது. பாறைகளும், புதர்களும் நிறைந்த பகுதி அது. என்.டி.ஆர். நடிக்கும் படப்பிடிப்பு என்று செய்தி வெளியானதும், ஏராளமான ரசிகர்கள் அங்கே கூடிவிட்டார்கள். பாறைகளிடையிலும், புதர்களிலும் அமர்ந்து என்.டி.ஆர். வருகைக்காக காத்திருந்தனர்.

அவர் வந்ததும் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. ஆனால் ரசிகர்கள் அவருக்குத் தொல்லை தராமல் அந்தந்த இடங்களிலேயே காத்திருந்தார்கள். ஷூட்டிங் முடிந்ததும், அவ்வளவு ரசிகர்களும் பாறைகளின் நடுவில் இருந்தும், புதர்களில் இருந்தும் எழுந்து நின்று ஆர்ப்பரித்தனர். என்.டி.ஆர். கைகளை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தபோது, அவர்கள் அனைவரும் அப்படியே அந்தந்த இடங்களிலேயே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தனர். இதைப் பார்த்த எங்களுக்கு இப்படியும் ஒரு ‘ஹீரோ வொர்ஷிப்பா’ என்று வியப்பாக இருந்தது.

என்.டி.ஆர். செட்டில் இருந்தாலே ஒருவித பயம் கலந்த மரியாதை அந்த இடத்தில் வியாபித்திருக்கும். கரகரப்பான குரலில் இடிபோலப் பேசுவார். அனாவசியமாக யாருடனும் பேசமாட்டார். தானுண்டு, தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் உண்டு என்று இருப்பவர். கொஞ்ச நேரம் கிடைத்தாலும், கண்களை மூடிக்கொண்டு, ரிலாக்ஸ் செய்யத் தொடங்கிவிடுவார். அவர் இன்னொருவர் மீது குறை, புரளி, புகார் சொல்லி நான் கண்டதில்லை; கேட்டதும் இல்லை. அப்படியொரு அருமையான மனிதர் என்.டி.ஆர். அவர் எங்களது படத்தில் நடித்ததை பெருமையாகவே எண்ணுகிறேன். தெலுங்கில் தயாரான ‘ராமு’ திரைப்படம் 4.5.1968–ல் வெளியாகி வெள்ளி விழா கண்டது.

அடுத்த வாரம்:  ஒரு வாரத்தில் தயாரான திகில் கதை

‘கமலை உயர்த்திப் பேசமாட்டேன்’

சில சமயங்களில் அவர் வெளிப்படுத்தும் கருத்துகள், சட்டெனப் பார்க்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் மனதுக்குப் பட்டதை தயவு தாட்சண்யமின்றி போட்டுடைத்துவிடுவார்.

கமல்ஹாசனின் நூறாவது படம் ராஜபார்வை. ஒரு சிறந்த கலைஞனுக்கு மரியாதை செய்யும் வகையில் ஒரு விழா நடத்த திட்டமிட்டோம். தென்னிந்திய மாநிலங்களில் முதல்வர்கள், அதே போல தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவரையும் அழைக்க விரும்பினோம். அப்போதைய தமிழக முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். விழாவுக்கு வர ஒப்புக்கொண்டார்.

என்.டி.ஆரைச் சந்திப்பதற்காக சென்னையில் இருந்த அவரது வீட்டுக்கு நானும், ‘இதயம்பேசுகிறது’ மணியனும் சென்றோம். அவரிடம், விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தோம். அப்போது நான் சற்றும் சிந்தித்துப் பார்த்திராத ஒரு கோணத்தில் அவர் பதில் அளித்தார்.

‘எம்.ஜி.ஆர். நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். நான் அப்படியில்லை. இன்னும் நடித்துக் கொண்டுதான் இருக்கேன். கமலைப் போலவே நானும் ஸ்ரீதேவியுடன் டூயட் பாடி ஆடுகிறவன். ரெண்டு பேருமே சமமாக இருப்பவர்கள். அப்படியிருக்கும்போது, நான் ஏன் அவரை மேடையில், ‘கமலைப் போல நடிகர் இல்லை’ என்று புகழ்ந்து சொல்லணும்?.

நான் அப்படிச் சொன்னால் அது வெறும் வாய் வார்த்தையாக மட்டும்தான் இருக்குமே தவிர, என் மனதில் இருந்து வந்த வார்த்தையாக இருக்க முடியாது. அதனால் நான் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்க மாட்டேன்’ என்று சிதறு தேங்காய் உடைப்பது போல, தன்னுடைய எண்ணப் போக்கை, எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளியிட்டார்.

அப்படியொரு வெளிப்படையான கலைஞனை, அதற்கு முன்பும் சரி.. அதற்கு பின்பும் சரி.. நான் சந்திக்கவே இல்லை.


Next Story