இந்து, கிறிஸ்தவ முறைப்படி நடக்கிறது; திருமண ஏற்பாடுகளில் நடிகை சமந்தா தீவிரம்


இந்து, கிறிஸ்தவ முறைப்படி நடக்கிறது; திருமண ஏற்பாடுகளில் நடிகை சமந்தா தீவிரம்
x
தினத்தந்தி 9 July 2017 9:45 PM GMT (Updated: 2017-07-10T01:28:36+05:30)

நடிகை சமந்தா புடவை நகைகள் வாங்கி தனது திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

ஐதராபாத்,

நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுக்கும் அக்டோபர் 6–ந்தேதி திருமணம் நடக்கிறது. இருவரும் 2010–ம் ஆண்டு தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை ‘ஏ மாய சேசவே’ என்ற பெயரில் தெலுங்கில் தயாரித்தபோது அதில் ஜோடியாக நடித்து காதல் வயப்பட்டனர்.

பல வருடங்கள் ரகசியமாக இருந்த இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து தற்போது திருமண ஏற்பாடுகள் தொடங்கி இருக்கிறது. திருமணத்துக்கு புடவைகள் எடுப்பது நகைகள் வாங்குவது போன்ற வேலைகளில் சமந்தா தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். இரு வீட்டு நெருங்கிய உறவினர்களுக்கு துணிமணிகள் எடுக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளார்.

அழகான வேலைப்பாடுகள் கொண்ட முகூர்த்த புடவைக்கு ஆர்டர் கொடுத்து உள்ளார். சமந்தா, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணத்தை கிறிஸ்தவ முறைப்படியும் இந்து முறைப்படியும் இரண்டு தடவை நடத்துகின்றனர். கிறிஸ்தவ முறையிலான திருமணம் கோவாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடக்கிறது. அங்கு இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்கிறார்கள். பின்னர் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொள்கின்றனர்.

திருமண சடங்குகள் மூன்று நாட்கள் நடைபெறும் என்று நாகசைதன்யா உறவினர்கள் தெரிவித்தனர். திருமணம் முடிந்ததும் 40 நாட்கள் தேனிலவுக்காக வெளிநாடு செல்கிறார்கள். சமந்தா தற்போது விஜய் ஜோடியாக மெர்சல், விஷால், ஆர்யாவுடன் இரும்புத்திரை படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இரண்டு தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.

திருமணத்துக்கு முன்பு ஒப்பந்தமான படங்களில் நடித்து முடித்து விட திட்டமிட்டு உள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகமாட்டேன் என்றும் கணவர் குடும்பத்தின் கவுரவம் பாதிக்காத வகையில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பேன் என்றும் சமந்தா கூறியுள்ளார்.


Next Story