நடிகரானது பற்றி பாக்யராஜ் ருசிகர பேச்சு


நடிகரானது பற்றி பாக்யராஜ் ருசிகர பேச்சு
x
தினத்தந்தி 4 May 2018 4:30 AM IST (Updated: 4 May 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

நடிகரானது பற்றி பாக்யராஜ் ருசிகரமாக பேசினார்.


டைரக்டர் பாண்டியராஜன் மகன் பிருத்வி, மலையாள நடிகை வீணா ஜோடியாக நடித்துள்ள படம்,‘தொட்ரா ’. ஜெய்சந்திரா சரவணகுமார் தயாரித்து, பாக்யராஜ் உதவியாளர் மதுராஜ் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் பாக்யராஜ் கலந்து கோண்டு பேசியதாவது:-

“நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்தேன். ஆனால் தெலுங்கில் இருந்து வந்திருந்த நிறைய பேர் பாண்டிபஜாரில் வாய்ப்பு கேட்டு திரிவதை பார்த்து, நமக்கு இது சரிப்பட்டு வராது என்று உணர்ந்து டைரக்டராக முடிவு செய்தேன். உதவி இயக்குனராக பணி செய்தபோது, திடீரென்று டைரக்டர் பாரதிராஜா என்னை அழைத்து, “என் புதிய படத்துக்கு பாடல் பதிவு முடிந்து விட்டது. இன்னும் கதாநாயகன் கிடைக்கவில்லை. எனவே நீயே கதாநாயகனாக நடி” என்றார்.

அப்படித்தான் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நடித்தேன். அந்த படத்தை முடித்து விட்டு டைரக்டராகும் ஆசையில் இருந்தேன். ‘கன்னிப்பருவத்திலே’ படப்பிடிப்பில், வில்லனுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். அதைப்பார்த்து வில்லன் கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பதாக என்னையே அதில் நடிக்க வைத்து விட்டனர்.

அதோடு நடிப்பதை விட்டுவிட்டு இயக்குனர் ஆகிவிடலாம் என்று திட்டமிட்டேன். ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்துக்கு ஒப்பந்தம் செய்து இருந்த நடிகர் வராததால், அந்த வேடத்திலும் உதவி இயக்குனர்கள் என்னை வற்புறுத்தி நடிக்க வைத்து விட்டனர். தொடர்ந்து ‘மவுன கீதங்கள்’ படத்திலும் என்னை நிர்ப்பந்தப்படுத்தி நடிக்க வைத்தனர். அதன்பிறகு நடிகராக தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. எல்லாமே நேரம்தான். வேண்டாம் என்று நினைத்தால் கூட, நமக்கு வர வேண்டியது நிச்சயம் வந்து சேரும்.

‘காதல்’ படத்தின் கதையை என்னிடம்தான் முதலில் சொன்னார்கள். சாந்தனுவுக்கு வயது குறைவாக இருந்ததால், “கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்காது” என்றேன். அதன் பிறகு பரத் ‘காதல்’ படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு கிடைக்க வேண்டும் என்பது நேரம்” இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் பரத், டைரக்டர்கள் பேரரசு, ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஜே.சதீஷ்குமார், ஜெய்சந்திரா, சரவணகுமார் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.
1 More update

Next Story