வித்யா பாலன், மஞ்சு வாரியர் தமிழில் கலக்க வரும் 2 நடிகைகள்


வித்யா பாலன், மஞ்சு வாரியர் தமிழில் கலக்க வரும் 2 நடிகைகள்
x
தினத்தந்தி 1 Feb 2019 4:30 AM IST (Updated: 31 Jan 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

வித்யாபாலன், மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளனர்.

தமிழ் பட உலகில் நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால், சமந்தா, ஹன்சிகா, தமன்னா, கீர்த்தி சுரேஷ், ரகுல் பிரீத்சிங் ஆகியோர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். கடந்த வருடம் இவர்கள் அதிக படங்களில் நடித்தார்கள். ஆனால் இந்த வருடம் படங்கள் குறைந்துள்ளன. ஆனாலும் நயன்தாரா நம்பர்-1 இடத்தில் தொடர்ந்து இருக்கிறார்.

இந்த வருடத்தின் புதிய வரவாக வித்யாபாலன், மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளனர். வித்யா பாலன் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சில்க் சுமிதா வாழ்க்கை கதையை மையமாக வைத்து வெளியான த டர்டி பிக்சர் படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.

இப்போது முதல் தடவையாக பிங்க் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகும் படத்தில் அஜித்குமாருடன் இணைந்து நடிக்கிறார். இதில் அஜித் மனைவியாக அவர் வருகிறார் என்றும் வழக்கறிஞர் தொழிலில் அஜித்தை ஊக்கப்படுத்துவதுபோல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இருவருக்கும் டூயட் பாடலும் உள்ளது. இந்த படத்தில் நடிக்க 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

மஞ்சு வாரியர் மலையாள பட உலகில் பெண் சூப்பர் ஸ்டாரினியாக கருதப்படுபவர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அவரது படங்கள் வசூலிலும் சக்கபோடு போடுகின்றன. இப்போது தனுஷ் ஜோடியாக அசுரன் படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார். இவர்கள் இருவரையும் மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அணுகி வருகிறார்கள்.

Next Story