ஷாருக்கான்- கேத்ரினா கைப் ‘முத்தத்தில் மோதல்’
இந்தி திரை உலகில் இளமைததும்பும் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர், கேத்ரினா கைப். இவர் எப்போதுமே மனந்திறந்து அதிரடியாக பேசக்கூடியவர்.
இந்தி திரை உலகில் இளமைததும்பும் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர், கேத்ரினா கைப். இவர் எப்போதுமே மனந்திறந்து அதிரடியாக பேசக்கூடியவர். கேத்ரினா ‘ஜீரோ’ என்ற படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்தார். அதில் சுவாரசியமான முத்தக்காட்சி ஒன்று இடம்பெற்றது. ஷாருக்கான், கேத்ரினாவுக்கு அழுத்தமாக முத்தங்கள் பதித்தார். ‘ஷாருக்கானிடம் முத்தங்கள் பெற கொடுத்துவைத்திருக்கவேண்டும்’ என்று பல நடிகைகளும் கூற, அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ‘அவரிடம் முத்தம் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி இல்லை.. எனக்கு முத்தம் தந்ததால் அவர்தான் அதிர்ஷ்டசாலி..’ என்று அதிரடியாக சொல்லி அசரவைத்திருக்கிறார், கேத்ரினா. அவரது பேட்டி:
இப்போது எந்த படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?
நான் தற்போது ‘பாரத்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். பரபரப்பாக நடந்த அந்த படப்பிடிப்பில் நான் நிறைய புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அடுத்து நடிப்பதற்காக பலரிடம் கதை கேட்டுக்கொண்டிருக்கிறேன். சிறந்த கதையை எதிர்பார்க்கிறேன். நான் இந்த ஆண்டுக்கென்று சில திட்டங்களை தீட்டிவிட்டு, அதை நோக்கி பயணிக்கும் ஆள்இல்லை. எந்த திட்டமும் போடாமல் செயல்படுவதுதான் என் திட்டம். நான் அமைதியாக இருக்கவும், ரசிகர்களுக்கு உண்மையாக இருக்கவும் விரும்புகிறேன்.
கடந்த ஆண்டு நீங்கள் நடித்து வெளியான ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’, ‘ஜீரோ’ ஆகிய படங்கள் வெற்றியடையவில்லையே..?
நான் இப்போது எந்த அவசரமுடிவையும் எடுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். நான் யார், எந்த மாதிரியான வேடங்கள் எனக்குப் பிடிக்கும் என்பதிலும் தெளிவடைந்துவிட்டேன். அதிர்ஷ்டவசமாக, ரசிகர்களும் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். எனது ரசிகர்களுக்கும், எனக்கும் நான் உண்மையாக இருக்க வேண்டும். எனக்கும் ரசிகர்களுக்கும் இடையில் உள்ள உறவு முக்கியமானது. அது ஒரு நாளில் முடிந்துபோகும் ‘டேட்டிங்’ அல்ல. திருமண உறவு போன்று நீண்டது, நெடியது. சில நேரங்களில் எனக்கு படவாய்ப்புக் கிடைக்காமல் போகலாம், நல்ல படங்கள் அமையாமல் போகலாம், மோசமான படங்களில் நடிக்கும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்க்கும் படங்கள் வசூலில் சரியில்லாமல் போகலாம். இவை அனைத்துமே எல்லோருக்குமே நடப்பவைதான். நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் நான் எனக்கென்று வகுத்துக்கொண்டுள்ள அடிப்படை விதிகளை மீறக் கூடாது என்று நினைக்கிறேன்.
‘ஜீரோ’ படத்தில் உங்களின் நடிப்பு பேசப்பட்டது. அதில் உங்களின் பபிதா குமாரி கதாபாத்திரம் பற்றி?
அந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. ஆனால் சில கதாபாத்திரங்களில் நடித்து முடிக்கும்போது கிடைக்கும் மன நிறைவு, இதிலும் கிடைத்தது.
தற்போது உங்களுக்கு அதிர்ஷ்டகாலம் என்று எடுத்துக்கொள்ளலாமா?
உண்மையில் இது எனக்கு அதிர்ஷ்ட காலம்தான். காரணம், ராஜ்நீதி, நமஸ்தே லண்டன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்திருக்கிறது. ராஜ்நீதி படத்தில், தனது கணவன் அநியாயமாகக் கொல்லப்பட்டபிறகு அரசியலில் குதிக்கும் ஒரு பெண்ணாக நடிக்கிறேன். அதேநேரம் ‘நமஸ்தே லண்டன்’ படத்தில் சமூகத்தின் வழக்கமான கட்டுப்பாடுகள், மனோ பாவத்தை உடைத்துக்கொண்டு வெளியே வரும் புதுமைப் பெண்ணாகத் தோன்றுகிறேன். நான் எனது சினிமா வாழ்வில் ஆரம்பத்தில் இருந்தே, வித்தியாசமான வேடங்களைத்தான் விரும்பி நடித்திருக்கிறேன். பொதுவாக, இன்றைக்கு பெண்கள் பலதுறைகளிலும் இறங்குகிறார்கள், கலக்குகிறார்கள், அது நமது திரைப்பட பெண் கதாபாத்திரங்களிலும் பிரதிபலிக்கிறது.
அதேநேரம், வெறும் மசாலாப் படங்கள் பெரும் வெற்றிபெற்று பணத்தை வாரிக் குவிக்கிறதே?
நான் வித்தியாசமான படங்களில்தான் நடிப்பேன். எல்லோரும் மசாலாப் படம் மசாலாப் படம் என்று ஓடினால், அதுவே அத்தகைய படங் களுக்கு சாவுமணி ஆகிவிடும். ஒரு நல்ல படம் சரியாகப் போகவில்லை என்றால், எல்லாப் படங் களுக்கும் அப்படித்தான் அமையும் என்று கூற முடியாது. மேற்கத்திய சினிமாக்களில் அங்குள்ள நடிகர், நடிகையின் வயதுக்கு ஏற்ற அழகான கதைகளைப் படமாக்குகிறார்கள்! ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ படத்தின் ஓபனிங்கும் கூட ஒரு புதிய சாதனை படைத்தது. ஒருவேளை அந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போயிருக்கலாம். நல்ல படங்களை, சுவாரசியமான படங்களை கொடுங்கள் என்றுதான் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
வருண் தவானின் நடனம் சார்ந்த படத்தில் நீங்கள் நடிக்காதது ஏன்?
என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாத நெருக்கடிதான் காரணம். வரலாறு சார்ந்த ‘பாரத்’ படத்தில் எனது கதாபாத்திரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அதுவும் தவிர, இப்படத்தை ஜூனில் முடிக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகப் படமாக்கினார்கள். நமக்கு எது கிடைக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நிச்சயமாகக் கிடைக்கும்.
நீங்கள் 2017-ம் ஆண்டில் சமூக ஊடகத்துக்கு வந்தீர்கள். தற்போது அதில் ஆக்டிவாக இருக்கிறீர்கள். அந்த ஊடகம் பற்றி?
நான் டுவிட்டரில் இல்லை. இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன். அது எனக்கு வசதியாக இருக்கிறது, பிடித்திருக்கிறது. நான் வெளிப்படையான பெண். காட்சிகள் வழியாக விஷயங்களைச் சொல்வதும், சமூகத்துடன் தொடர்புகொள்வதும் எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் நான் இன்ஸ்டாகிராமை விரும்புகிறேன்.
Related Tags :
Next Story